IND vs AUS : வாயில் பேசாமல் செயலில் பேசி வெறும் 2 மணி நேரத்தில் உலகின் நம்பர் ஒன் அணியை சுருட்டி வீசிய இந்தியா – வென்றது எப்படி

IND vs AUS
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரில் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் இந்தியா விளையாடுகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் முனைப்புடன் களமிறங்கியது. அதற்காக சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியர்கள் வேண்டுமென்றே விமர்சித்ததும் அதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்ததும் ஆரம்பத்திலேயே அனல் பறந்தது.

அந்த நிலைமையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் 2.9 டிகிரி மட்டுமே சுழன்ற பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய இந்தியாவுக்கு தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. டேவிட் வார்னர் 1, உஸ்மான் கவாஜா 1, மாட் ரென்ஷா 0, ஸ்டீவ் ஸ்மித் 37, பீட்டர் ஹேண்ட்ஸகோம்ப் 31, அலெக்ஸ் கேரி 36 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களை எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

2 மணி நேரத்தில்:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பெயருக்காக 76 ரன்கள் ஓப்பனிங் அமைத்த ராகுல் 20 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் 23 ரன்கள் எடுத்தது தவிர்த்து புஜாரா 7, விராட் கோலி 12, சூரியகுமார் யாதவ் 8, கேஎஸ் பரத் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று தனது தரத்தை காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 120 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அதனால் எளிதில் அவுட்டாக்கி விடலாம் என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு 8வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 70 ரன்களும் அக்சர் படேல் 84 ரன்களும் குவித்து அவுட்டான நிலையில் முகமது ஷமியும் தனது பங்கிற்கு அதிரடியாக 37 (47) ரன்கள் எடுத்தார். அதனால் சுழலுக்கு சாதகமான அதே மைதானத்தில் இந்தியா 400 ரன்கள் குவித்த நிலையில் 3.4 டிகிரி சுழல் கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்தாத ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக டோட் முர்பி தனது அறிமுக போட்டியில் 7 விக்கெட் அசத்தினார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மடமட விக்கெட்டுகளை இழந்து வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக 3வது நாள் உணவு இடைவெளியில் பேட்டிங்கை துவங்கிய அந்த அணிக்கு ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுடன் போராடினாலும் எதிர்புறம் உஸ்மான் கவாஜா 5, டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுஸ்ஷேன் 17, மாட் ரென்ஷா 2, பீட்டர் ஹேண்ட்ஸகோப் 6, அலெக்ஸ் கேரி 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அந்தளவுக்கு அனலாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 3வது நாள் தேநீர் இடைவெளிக்கு முன் 2 மணி நேரத்தில் உலகின் நம்பர் ஒன் ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்துள்ளது. மறுபுறம் பிட்ச் பற்றி வாயில் மட்டும் பேசிய ஆஸ்திரேலியா செயலில் சொதப்பியதால் படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க:IND vs AUS : அக்சர் பட்டேலை டீம்ல ஏன் சேத்தோம்னு இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் – விக்ரம் ரத்தோர் கருத்து

இப்போட்டியில் இந்தியாவை விட அதிகமான சுழல் கிடைத்தும் நேதன் லயன் போன்ற அனுபவ ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றாமல் சொதப்பினர். அதே போல் இந்திய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 200 ரன்கள் விளாசிய நிலையில் மொத்த ஆஸ்திரேலிய அணியினரும் முதல் இன்னிங்ஸில் 200 ரன்களை கூட தாண்டவில்லை. மேலும் லபுஸ்ஷேன், ஸ்மித் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திண்டாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement