
ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49.3 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு மிட்சேல் மார்ஷ் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் நம்பிக்கை நட்சத்திரங்கள் டேவிட் வார்னர் 41, ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் 110/2 என்ற நிலைமையில் இருந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் லபுஸ்சேன் 27, கிளன் மேக்ஸ்வெல் 15, அலெக்ஸ் கேரி 0, கேமரூன் கிரீன் 8 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி 200 ரன்கள் கூட தாண்ட முடியாத அளவுக்கு சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
மகத்தான வெற்றி:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 200 என்ற சுலபமான இலக்கை அடித்து நொறுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 டாப் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஸ்டார்க், ஹேசல்வுட் வேகத்தில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி மெகா பின்னடைவையும் ஏமாற்றத்தையும் கொடுத்தனர்.
அதனால் 2/3 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியா 2019 உலக கோப்பை செமி ஃபைனல் போல தோல்வியை சந்திப்பது உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் இம்முறை நாங்கள் இருக்கிறோம் என்பது போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அடுத்ததாக வந்த கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்ச்சை மார்ஷ் தவற விட்டதை நினைத்து வருந்தும் அளவுக்கு நங்கூரத்தை போட்ட அவருடன் ராகுல் தம்முடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். நேரம் செல்ல செல்ல ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 38 ஓவர்கள் வரை அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றிய போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 6 பவுண்டரியுடன் 85 (116) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ராகுல் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 97* (115) ரன்களும் பாண்டியா 11* (8) ரன்களும் எடுத்ததால் 41.2 ஓவரில் 201/4 ரன்கள் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்றும் வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற வரலாறு காணாத மாபெரும் சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: IND vs AUS : 2/3 என சரிந்தும்.. ஆஸிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா.. வரலாறு காணாத சரித்திர சாதனை வெற்றி
இதற்கு முன் 18 வருடங்களுக்கு முன்பாக கடந்த 2004இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா மற்றும் 2009இல் வங்கதேசத்திற்கு எதிராக இலங்கை ஆகிய அணிகள் தலா 4/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்றும் போராடி வென்றதே முந்தைய உலக சாதனையாகும். அத்துடன் வரலாற்றில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகியும் இந்தியா வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.