212 ரன்ஸ்.. பெங்களூருவில் அனல் தெறித்த டபுள் சூப்பர் ஓவர்.. உச்சகட்ட த்ரில்லரில் ஆப்கனை இந்தியா சாய்த்தது எப்படி?

IND vs AFG Super Over
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெயிஸ்வாலை 4 ரன்களில் அவுட்டாக்கிய பரிட் அஹ்மத் அடுத்ததாக வந்த விராட் கோலியை கோல்டன் டக் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த சிவம் துபே 1, சஞ்சு சாம்சன் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 22/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா 100 ரன்கள் தாண்டுமா என ரசிகர்கள் சோகமடைந்த போது மறுபுறம் நின்ற ரோகித் சர்மா அடுத்ததாக வந்த ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஆரம்பத்தில் அழுத்தத்தை உடைப்பதற்காக மிகவும் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி 10 ஓவர்கள் கடந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியாக விளையாட துவங்கியது.

- Advertisement -

டபுள் சூப்பர் ஓவர்:
அதில் நன்கு செட்டிலான ரோகித் சர்மா நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடித்து 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 121* (69) ரன்கள் குவித்தார். அவருடன் 5வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்திய ரிங்கு 2 பவுண்டரி 6 சிக்சருடன் 69* (39) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 212/4 ரன்கள் குவித்து மிரட்டியது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரித் அகமத் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கம் கொடுத்த ஓபனிங் ஜோடியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 50 (32) ரன்களில் குல்தீப் சுழலில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் சவாலை கொடுத்த இப்ராஹிம் ஜாட்ரானை 50 ரன்களில் அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்து வந்த ஓமர்சாயை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக வந்த முகமது நபி அதிரடியாக விளையாடி 34 (16) ரன்களை விளாசி பெரிய அச்சுறுத்தலை கொடுத்த போது மீண்டும் வாஷிங்டன் சுந்தர் அவுட்டாக்கி ரசிகர்களை நிம்மதியடைய வைத்தார். அந்த நிலைமையில் வந்த கரீம் ஜானத் 2, நஜிபுல்லா ஜாட்ரான் 5 ரன்களில் அவுட்டான போதிலும் எதிர்ப்புறம் குல்ஃபதின் நைப் அதிரடியாக விளையாடியதால் வெற்றியை நெருங்கிய ஆப்கானிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

அதில் முகேஷ் குமார் 2 ஒய்ட் போட்டு தடுமாற்றமாக வீசியதை பயன்படுத்திய குல்பதின் 4, 0, 2, 6, 2, 2 ரன்கள் எடுத்து மொத்தம் 55* (23) ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவரில் முகேஷ் குமாரின் முதல் பந்தில் குல்பதினை 1 ரன்னில் விராட் கோலி ரன் அவுட்டாக்கினார். ஆனாலும் முகமது நபி – குர்பாஸ் ஆகியோர் சேர்ந்து 1, 4, 1, 6, 3 பைஸ் எடுத்ததால் ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து அசமதுள்ளா வீசிய சூப்பர் ஓவரில் ரோகித், ஜெயஸ்வால் தலா 1 சிங்கிள் எடுத்தனர். பின்னர் 3, 4வது பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா 5வது பந்தில் சிங்கிள் எடுத்து ரிட்டையர்ட் அவுட்டாகி சென்றார். அப்போது கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது ஜெய்ஸ்வால் சிங்கிள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் போட்டி சமனில் முடிந்தது. அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் பரிட் அஹ்மதுக்கு எதிராக 6, 4 விளாசிய ரோஹித் 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். இருப்பினும் 4வது பந்தில் ரிங்கு அவுட்டாக அடுத்த பந்தில் சஞ்சு சம்சானுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் ரோகித் சர்மா ரன் அவுட்டானார்.

இதையும் படிங்க: எனது வாழ்க்கை பயணம் திரைப்படமானால் அவர்தான் ஹீரோவா நடிக்கணும் – யுவ்ராஜ் சிங் விருப்பம்

அப்படி 2 விக்கெட்டுகளை இழந்ததால் கடைசிப் பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை தவறிய இந்தியா 12 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை வீசிய ரவி பிஸ்னோய் முதல் பந்தில் முகமது நபியை அவுட்டாக்கினார். 2வது பந்தில் கரீம் ஜனத் 1 ரன் எடுத்த நிலையில் 3வது பந்தில் குர்பாஸை அவுட்டாக்கிய பிஸ்னோய் ஒரு வழியாக இந்தியாவை த்ரில் வெற்றி பெற வைத்தார். அதனால் 3 – 0 என்ற கணக்கில் இத்தொடரில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்ற இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தோற்றதில்லை என்ற பெரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது.

Advertisement