ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 9வது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21, இப்ராஹிம் ஜாட்ரான் 22, ராகில் சா 16 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
அதனால் 63/3 என தடுமாறி அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் ஷாஹிதியுடன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஓமர்சாய் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் அசத்திய சாஹித்தையும் முடிந்தளவுக்கு போராடி 80 (88) ரன்கள் குவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் முகமது நபி 19, நஜிபுல்லா ஜாட்ரான் 2, ரசித் கான் 16 ரன்களில் அவுட்டானதால் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 272/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா அசத்தல் வெற்றி:
மறுபுறம் 300 ரன்கள் தொடவிடாத அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் ஒருபுறம் தடுமாறிய நிலையில் எதிர்ப்புறம் கேப்டன் ரோகத் சர்மா ஆப்கானிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்கள் சேர்த்தார்.
அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 50 ரன்கள் கடந்து நேரம் செல்ல செல்ல அதிரடியை குறைக்காமல் 63 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக் கோப்பை வரலாற்றில் வேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார். மறுபுறம் தடுமாறிய இசான் கிசான் முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 47 ரன்களில் அவுட்டாக்கிய ரசித் கான் அடுத்த சில ஓவர்களில் ரோகித் சர்மாவையும் 16 பவுண்டரை 5 சிக்ஸருடன் 131 (85) ரன்களில் அவுட்டாக்கினார்.
அதன் வாயிலாக உலகக் கோப்பையில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை (6) உடைத்து ரோஹித் மற்றுமொரு உலக சாதனை படைத்தார். இறுதியில் ரோகித்துடன் இணைந்த விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய சொந்த ஊரில் 55* (56) ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 25*23) ரன்களும் எடுத்ததால் 35 ஓவர்களிலேயே 273/2 ரன்கள் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IND vs AFG : கபில் தேவின் 40 வருட சரவெடி சாதனை காலி.. சச்சினை மிஞ்சி உ.கோ அரசனாக ரோஹித் உலக சாதனை
அப்படி 15 ஓவர்கள் மீதம் வைத்து வென்றதன் காரணமாக 4 போட்டிகளில் 4 புள்ளிகளை பெற்ற இந்தியா (+1.500) ரன் ரேட் அடிப்படையில் 4 புள்ளிகளை கொண்டுள்ள பாகிஸ்தானை (+0.927) முந்தி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்தது.