IND vs BAN : முதல் இன்னிங்ஸிலேயே வங்கப்புலிகள் கொடுத்த அதிர்ச்சி – அவமானத்தை தவிர்க்குமா இந்தியா? ஸ்கோர் இதோ

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain
- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அருகில் இருக்கும் வங்கதேசத்திற்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாடுகிறது. அந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதியன்று தலைநகர் தாக்காவில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தடவிய ஷிகர் தவான் 7 (17) ரன்னில் போல்டாகி சென்றார்.

அதனால் நிதானத்தை வெளிப்படுத்த முயன்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 (31) ரன்களில் காலி செய்த சாகிப் அல் ஹசன் அதே ஓவரில் மற்றொரு புறம் நின்ற விராட் கோலியையும் 9 (15) ரன்கள் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 49/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவை 4வது விக்கெட்டுக்கு ராகுலுடன் 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஷ்ரேயஸ் ஐயர் 24 (39) எடுத்தாலும் முக்கிய நேரத்தில் அவுட்டாகி சென்றார். அதனால் 92/4 என மேலும் தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கி வாஷிங்டன் சுந்தர் நங்கூரமாக நின்று ராகுலுக்கு கம்பெனி கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 5வது விக்கெட்டுக்கு 60 பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை நல்ல நிலையை எட்ட வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 (43) ரன்களில் வாஷிங்டன் சுந்தர் அவுட்டாகி சென்றார். அப்போது 152/5 என இருந்த இந்தியா அடுத்து வந்த சபாஸ் அஹமத் 0, ஷார்துல் தாகூர் 2, தீபக் சஹர் 0 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வங்கதேசத்தின் அற்புதமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 156/8 என மொத்தமாக சரிந்தது. இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அசத்தலாகவும் செயல்பட்ட கேஎல் ராகுல் இந்தியாவை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 5 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் அரை சதமடித்து 73 (70) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார்.

அதனால் 200 ரன்களை தொடும் வாய்ப்பை இழந்த இந்தியா 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் எபோதக் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

இப்போட்டி நடைபெறும் பிட்ச் என்ன தான் பவுலிங்க்கு சாதகமாக இருந்தாலும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. அதை விட மிடில் ஆர்டரில் ராகுல் ஓரளவு காப்பாற்றிய நிலையில் அணி நிர்வாகம் பெரிதும் எதிர்பார்த்த தீபக் சஹார் உள்ளிட்ட 4 லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்து இந்தியாவை கை விட்டுள்ளார்கள்.

அதனால் வங்கதேச பவுலர்கள் அட்டகாசமாக செயல்பட்டதை பார்த்து இந்திய பவுலர்கள் பொறுப்புடன் துல்லியமாக செயல்பட்டால் மட்டுமே இப்போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் வங்கதேசம் கடந்த 2015க்குப் பின் இந்தியா உட்பட எந்த அணிக்கு எதிராகவும் ஒருநாள் தொடரில் தோற்றதில்லை. அந்த தெம்புடன் தற்போது அந்த அணி 187 என்ற சுலபமான இலக்கை துரத்தி வருகிறது

Advertisement