224/2 டூ 319 ஆல் அவுட்.. அஸ்வின் இல்லாமலயே இங்கிலாந்தை சுருட்டி.. குக் முகத்தில் கரியை பூசிய இந்தியா

IND vs ENG 4
- Advertisement -

ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் மூன்றாவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 89 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய ஜாக் கிராவ்லியை 15 ரன்களில் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை படைத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்த நிலையில் எதிர்புறம் இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓலி போப் 39 ரன்களில் சிராஜ் வேகத்தில் வீழ்ந்தார்.

- Advertisement -

மிரட்டிய இந்தியா:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய பென் டக்கெட் 88 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக சதமடித்த இங்கிலாந்து வீரராக சாதனை படைத்து சவாலை கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக ஜோ ரூட் கை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் 224/2 என்ற வலுவான நிலையில் இங்கிலாந்து விளையாடியது.

இருப்பினும் மூன்றாவது நாள் உணவு இடைவெளிக்கு பின் தீயாக செயல்பட்ட இந்திய பவுலர்களில் பும்ரா வேகத்தில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தேவையின்றி ரிவர் ஸ்வீப் அடித்து 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஜானி பேர்ஸ்டோவை டக் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் யாதவ் மறுபுறம் அதிரடியாக விளையாடி 153 (151) ரன்கள் குவித்த பென் டக்கட்டையும் ஒரு வழியாக காலி செய்தார்.

- Advertisement -

அதனால் திடீரென சரிவை சந்தித்த இங்கிலாந்துக்கு நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நிதானத்தை காட்ட முயற்சித்த பென் ஃபோக்ஸ் 13 ரன்களில் சிராஜ் வேகத்தில் நடையை கட்டினார். அதே வேகத்தில் அடுத்ததாக வந்த டாம் ஹார்ட்லி 9, ரீகன் அகமது 6 ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் 224/2 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்தை அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்தியா 319 ரன்களுக்கு சுருட்டி இப்போட்டியில் 126 ரன்கள் முன்னிலை பெற்று மிரட்டியுள்ளது. குறிப்பாக குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலையால் பாதியிலேயே வெளியேறிய அஸ்வின் இல்லாததால் இந்தியா தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் செயல்பட்ட சிராஜ் 4, குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா 2, பும்ரா 1 எடுத்து இங்கிலாந்தை சுருட்டி இந்தியாவுக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க: கும்ப்ளே, அஷ்வின், ஹர்பஜன், கபில் தேவ் ஆகியோரை தொடர்ந்து 5 ஆவது இந்திய வீரராக – ஜடேஜா படைத்த மாபெரும் சாதனை

அதை விட பென் டக்கெட் அதிரடியாக விளையாடியதால் 3வது உணவு இடைவெளியில் இங்கிலாந்து 450 ரன்கள் தாண்டி இந்தியாவை விட முன்னிலை பெற்று என்று நேற்று மாலை முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் அதிரடியான கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இங்கிலாந்தை தேநீர் இடைவெளிக்குள் 400க்குள் ஆல் அவுட் செய்துள்ள இந்தியா அவருடைய முகத்தில் கரியை பூசியுள்ளது.

Advertisement