வெறும் 37 ரன்ஸ் தான்.. சௌரப் குமார் சுழலில் திணறும் இங்கிலாந்து லயன்ஸ்.. உறுதியான இந்தியா ஏ வெற்றி?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் 2 நாட்கள் முடிவில் இங்கிலாந்தை சிறப்பாக எதிர்கொண்டு வரும் இந்தியா வெற்றிக்கான வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இத்தொடரை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் பயிற்சி போட்டிகளில் மோதி வருகின்றன.

அதில் முதல் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி ஜனவரி 24ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் சுமாராக விளையாடி வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓலிவர் ப்ரைஸ் 48 ரன்கள் எடுக்க இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4, யாஷ் தயால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

உறுதியான வெற்றி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி ஆரம்பம் முதலே இங்கிலாந்து லயன்ஸ் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 493 ரன்கள் குவித்தது. குறிப்பாக திலக் வர்மா 6, ரிங்கு சிங் 0, உபேந்திரா யாதவ் 0 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 58 ரன்களும் தேவ்தூத் படிக்கல் சதமடித்து 105 ரன்களும் எடுத்தனர்.

அதை விட மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 18 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 161 ரன்களும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்து 57 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சௌரப் குமார் தன்னுடைய பங்கிற்கு 77 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக மேத்யூ போட்ஸ் 6 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 341 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ்க்கு கீட்டன் ஜென்னிங்ஸ் 37, ஓலிவர் ப்ரைஸ் 16, ஜேம்ஸ் ரெவ் 22, பிரிடோன் கார்ஸ் 38, மேத்தியூ போட்ஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சௌரப் குமார் சுழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதே போல அலெக்ஸ் லீஸ் 1, கேப்டன் போகன்னன் 48 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: வெற்றியை உறுதி செய்வதோடு சேர்த்து 3 ஆம் நாளில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தவுள்ள சம்பவம் – விவரம் இதோ

அதனால் 156/6 என ஒரு கட்டத்தில் தடுமாறிய அந்த அணிக்கு ஓலி ராபின்சன் மிகவும் கடுமையாக போராடி 84* ரன்களும், டாம் லாவ்ஸ் 18* ரன்களும் எடுத்துள்ளனர். இருப்பினும் 3வது நாள் முடிவில் 304/8* ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் இன்னும் 37 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்தியா ஏ வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஒருவேளை இன்னும் 37 ரன்களுக்குள் அந்த அணியின் கடைசி 2 விக்கெட்டுகளையும் எடுக்கும் பட்சத்தில் இந்தியா ஏ இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement