
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கு பயிற்சி எடுக்கும் நோக்கத்தில் இளம் வீரர்கள் விளையாடும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 31ஆம் தேதி மெக்காய் நகரில் துவங்கியது.
அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் பின் களமிறங்கிய இந்தியா ஏ அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தூத் படிக்கல் 36, தமிழக வீரர் சாய் சுதர்சன் 21, நவ்தீப் சைனி 23 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிராண்டன் டாகெட் 6 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணியை இந்தியா ஏ அணி போராடி 195 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39, வெப்ஸ்டர் 33, கூப்பர் கொன்லி 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் அபாரமாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
பின்னர் 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் ருதுராஜ் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய அபிமன்யூ ஈஸ்வரன் 12 ரன்களில் ரன் அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். முதல் இன்னிங்ஸில் தவறை செய்யாமல் அந்த ஜோடி இம்முறை சிறப்பாக விளையாடியது.
குறிப்பாக நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து சுமாரான பந்துகளை அடித்து அந்த ஜோடி 50க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தது. நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதம் அடித்தார்கள். தொடர்ந்து அசத்திய அந்த ஜோடி இரண்டாவது நாள் முடிவில் அவுட்டாகாமல் சவாலை கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: 192 ரன்ஸ்.. அம்பயரிடம் புகார் செய்த மிட்சேல்.. சர்பராஸ் கானுக்கு ஆதரவாக குதித்த ரோஹித்.. நடந்தது என்ன?
அதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை நெருங்கி 9 பவுண்டரியுடன் 96* (185) ரன்களும் தேவ்தூத் படிக்கல் 80* (167) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். அவர்களுடைய அட்டகாசமான ஆட்டத்தால் திருப்பி அடிக்கும் இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணியை விட 120 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்திய வீரர்கள் தவறுகளை திருத்தி விளையாடுவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.