
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இந்தியா ஒரு வார இடைவெளிக்குப் பின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடரின் 3 போட்டிகளும் இந்திய நேரப்படி 12.45 மணிக்கு நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் தரமான வீரர்களுடன் ஆஸ்திரேலியா டாப் அணிகளையும் அலறவிட்ட ஜிம்பாப்வே 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் பலவீனமாக மாறியுள்ளது. அதனால் வழக்கம் போல அந்த அணிக்கு எதிராக ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் அறிவிக்கப்பட்ட இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.
முன்னோட்டம்:
இந்தியா: இருப்பினும் சமீபத்தில் இதை விட பலமான வெஸ்ட் இண்டீஸை இதே இளம் வீரர்களை வைத்து வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்ற இந்தியா இந்த தொடரிலும் கிட்டத்தட்ட அதே வீரர்களுடன் நல்ல பார்முடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. அதனால் இத்தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தார்போல் கேஎல் ராகுல், ஷிகர் தவான், சுப்மன் கில், அக்சர் படேல், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் நிறைந்துள்ளனர்.
ஜிம்பாப்வே: மறுபுறம் என்னதான் கத்துக்குட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது ஜிம்பாப்வேவுக்கு மிகப்பெரிய பலமாகும். மேலும் கடந்த வாரம் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு அந்த அணி இரு தொடர்களையும் வென்று அசத்தியது. எனவே நல்ல பார்மில் இருக்கும் அந்த அணியும் அதே புத்துணர்ச்சியுடன் இந்தியாவுக்கு கடுமையான சவால் கொடுத்து இத்தொடரையும் வெல்ல போராட உள்ளது. சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கயா, கேப்டன் சகப்வா, ரியன் புர்ள் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் அந்த அணிக்கு பலமாகவும் இந்தியாவுக்கு சவால் கொடுப்பவர்களாகவும் உள்ளனர்.
வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மொத்தம் 63 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 51 போட்டிகளில் வென்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது, ஜிம்பாவே 10 போட்டிகளில் மட்டும் வென்றது. 2 போட்டிகள் டையில் முடிந்தது. அதிலும் கடந்த 9 வருடங்களாக கடைசி 12 போட்டிகளாக இந்தியா தோற்காமல் வெற்றிநடை போடுகிறது.
2. இந்த தொடர் நடைபெறும் ஜிம்பாப்வே மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 23 போட்டிகளில் 19 போட்டிகளில் வென்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது, ஜிம்பாவே 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.
3. வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 9 ஒருநாள் தொடர்களில் இந்தியா 8 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. 1996இல் மட்டும் ஜிம்பாப்வே வென்றது.
4. அதேபோல் ஜிம்பாவே மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 6 தொடர்களில் இந்தியா 5 கோப்பைகளை வென்றது, ஜிம்பாப்வே 1 கோப்பையை மட்டும் வென்றது.
அதிக ரன்கள், விக்கெட்கள்:
இந்த தொடர் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெறுவதால் அது சம்பந்தப்பட்ட பேட்டிங், பவுலிங் புள்ளி விவரங்களைப் பார்ப்போம்:
1. ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் : 370
2. அம்பத்தி ராயுடு : 369
3. சவுரவ் கங்குலி : 293
2. ஜிம்பாப்வே மண்ணில் சச்சின் டெண்டுல்கர், அம்பத்தி ராயுடு, சௌரவ் கங்குலி, ரோகித் சர்மா, விராட் கோலி, சிகர் தவான், கேஎல் ராகுல், முகமது கைஃப், யுவராஜ் சிங், கேதார் ஜாதவ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 1 சதம் அடித்துள்ளனர்.
3. சச்சின் டெண்டுல்கர், அம்பத்தி ராயுடு, ராகுல் டிராவிட், ரவீந்திர ஜடேஜா, ரஹானே, எம்எஸ் தோனி ஆகியோர் ஜிம்பாப்வே மண்ணில் அதிகபட்சமாக 2 அரை சதங்கள் அடித்துள்ளனர். ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் : சச்சின் டெண்டுல்கர் – 127* (130), புலவாயோ, 1998
4. ஜிம்பாப்வே மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 இந்திய வீரர்கள் இதோ:
1. அமித் மிஸ்ரா : 19
2. அஜித் அகர்கர் : 17
3. ஹர்பஜன் சிங் : 13
5. இர்பான் பதான் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் மட்டுமே ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக சாதனை படைத்துள்ளனர்.
6. அதேபோல் கடந்த 2013இல் புலவாயோ நகரில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் 6/48 விக்கெட்டுகளை எடுத்து அமித் மிஸ்ரா ஜிம்பாப்வே மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: IND vs ZIM : ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்து இருந்தாலும் அவரு விளையாடுறது கஷ்டம் – பாவம் அவரு
7. ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர்: 294/8, ஹராரே, 2013.