IND vs WI : வெ.இ மண்ணில் இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் – அதிக ரன்கள், விக்கெட் பட்டியல் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுமாராக செயல்பட்ட புஜாரா, ஷமி, உமேஷ் யாதவ் போன்ற சீனியர்கள் கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்த தவறுகளை திருத்திக் கொண்டு இத்தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறக்கும் இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்கள் மீதான விமர்சனங்களை துடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளனர்.

IND-vs-WI

- Advertisement -

அத்துடன் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற தரமான முதன்மை வீரர்களுடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா ஒரு காலத்தில் மிரட்டினாலும் தற்போது கத்துக்குட்டியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை இத்தொடரில் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கிரைக் ப்ரத்வெய்ட் தலைமையில் ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான இந்தியாவை வீழ்த்தி மறுமலர்ச்சி காண்பதற்காக இத்தொடரில் போராட உள்ளது.

வரலாற்று புள்ளிவிவரங்கள்:
1. அந்த வகையில் வரலாற்றில் இதுவரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 98 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் 30 போட்டிகளில் வென்று இப்போதும் முன்னிலையில் இருக்கிறது. மறுபுறம் இந்தியா 22 போட்டிகளில் வென்ற நிலையில் 46 போட்டிகள் டிராவில் முடிந்தன.

Virat Kohli2. அதே போல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இதுவரை களமிறங்கிய 51 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 9இல் மட்டுமே வென்றுள்ளது. 16 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில் 26 போட்டிகள் டிராவில் முடிந்தன. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையில் 2 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 21ஆம் நூற்றாண்டில் வலுவான அணியாகவே செயல்பட்டு வருகிறது.

3. வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ராகுல் டிராவிட் : 1511
2. சுனில் கவாஸ்கர் : 1404
3. விவிஎஸ் லக்ஷ்மண் : 1146

- Advertisement -

Ishant-Sharma

4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ராகுல் டிராவிட், பாலி உம்ரிக்கர், சர்தேசாய் ஆகியோர் (தலா 3) உள்ளனர். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய வீரராக ராகுல் டிராவிட் முதல் இடத்திலும் (11) சுனில் கவாஸ்கர் 2வது இடத்திலும் (10) பாலி உம்ரிக்கர் 3வது இடத்திலும் (7) உள்ளனர். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் (220 ரன்கள்) சாதனை படைத்துள்ளார்.

5. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களின் பட்டியலில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே : 45
2. இஷாந்த் சர்மா : 41
3. ஸ்ரீனிவாசன் வெங்கட்ராகவன் : 39

- Advertisement -

Ashwin

6. அதே போல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய வீரர்களாக அனில் கும்ப்ளே, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், சுபாஷ் குப்தே (தலா 3) ஆகியோர் உள்ளனர். இருப்பினும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் (7/83) சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:கம்பீரை மாதிரியே கோபக்காரர், லக்னோ அணியின் புதிய பயிற்சியாளராக வரப்போகும் முன்னாள் ஆஸி ஜாம்பவான் – ரிப்போர்ட் இதோ

7. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 588/8 டிக்ளேர், க்ராஸ் ஐஸ்லெட் 2006. குறைந்தபட்ச ஸ்கோர் : 81 ஆல் அவுட், பிரிட்ஜ்டவுன், 1997.

Advertisement