கம்பீரை மாதிரியே கோபக்காரர், லக்னோ அணியின் புதிய பயிற்சியாளராக வரப்போகும் முன்னாள் ஆஸி ஜாம்பவான் – ரிப்போர்ட் இதோ

Gambhir
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மறுபுறம் கோப்பையை வெல்ல போராடிய எஞ்சிய அணிகளுக்கு மத்தியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் தங்களுடைய முதல் சீசனை போலவே இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் பாதியிலேயே விலகிய போதும் அந்த அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்து சிறப்பாகவே செயல்பட்டது.

இருப்பினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் வெற்றிகரமான மும்பையிடம் தோல்வியை சந்தித்த லக்னோ மீண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. முன்னதாக கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஆன்ட்டி ஃபிளவர் செயல்பட்டு வந்தார். இருப்பினும் அவருடைய 2 வருட பதவி காலம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த வருடத்துடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த சீசனில் லக்னோவுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆஸி பயிற்சியாளர்:
இந்நிலையில் அந்த பதவிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட உள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மொத்தமாக 105 டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்கள் உட்பட 7696 ரன்களை குவித்துள்ள அவர் அந்த காலகட்டங்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஜாம்பவானாகவே போற்றப்படுகிறார்.

அதை விட ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு 2021 டி20 உலக கோப்பையை வெல்ல உதவிய அவர் பிக்பேஷ் டி20 தொடரில் பெர்த் அணி 3 கோப்பையை வெல்வதற்கு உதவியுள்ளார். இருப்பினும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்தித்ததால் பின்னடைவுக்கு உள்ளான அவர் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சில விமர்சனங்கள் இருந்தன.

- Advertisement -

அதனால் பதவி விலகிய அவர் தற்போது வர்ணையாளராக செயல்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்படுவதற்கு ஒப்பந்தமாக உள்ளதாக தெரிய வருகிறது. சொல்லப்போனால் 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமான அவர் கடைசி நேரத்தில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் லக்னோ அணிக்கு முதல் முறையாக பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இது பற்றி லக்னோ அணி நிர்வாகம் மற்றும் அவரது தரப்பில் எந்த செய்திகளும் வெளியாகவில்லை.

ஆனால் தற்போது அதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அவர் விஜய் தகியா, ஜான்டி ரோட்ஸ், மோர்னி மோர்கல் ஆகிய பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் துணைப் பயிற்சியாளர்களுடன் இணைந்து லக்னோவை வழி நடத்துவார். அத்துடன் ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன் ஆகிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் வரிசையில் அவரும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் செயல்படுவார்.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற ராயுடுவுக்கு பதிலாக சி.எஸ்.கே அணியில் யோகி பாபுவா? – தல தோனி அளித்த கலகலப்பான பதில் இதோ

மேலும் ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராக செயல்பட்ட காலங்களில் அவர் கிட்டத்தட்ட விராட் கோலி போல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் சிறு சிறு விஷயங்களுக்கு கூட ரியாக்சன் கொடுப்பவராகவே இருந்தார். அப்படிப்பட்ட அவர் ஒருவேளை இப்பதவியில் நியமிக்கப்பட்டால் ஏற்கனவே இந்த சீசனில் விராட் கோலியுடன் மோதி அடிக்கடி கோபத்தை வெளிப்படுபவராக இருந்து வரும் ஆலோசகர் கௌதம் கம்பீருடன் இணைந்து எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்ப்பது ரசிகர்களுக்கு சுவாரசியமானதாக இருக்கும் என்றே சொல்லலாம்.

Advertisement