212 ரன்னை அசால்டாக ஊதிதள்ளிய தெ.ஆ அணி. இந்தியா அதிர்ச்சி தோல்வி – நடந்தது என்ன?

David Miller SA
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் நிறைவு பெற்றதையடுத்து தென்னாப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுக்கும் நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவிற்கு ருதுராஜ் கைக்வாட் – இஷான் கிசான் ஜோடி பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 57 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர்.

அதில் 3 சிக்ஸருடன் ருதுராஜ் கைக்வாட் 23 (15) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சுமாராக பேட்டிங் செய்து விமர்சனத்திற்குள்ளான மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனலாக பேட்டிங் செய்து தென்ஆப்பிரிக்கா பவுலர்களை வெளுத்து வாங்கினார். 13 ஓவர்கள் வரை அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் கடந்து 76 (31) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாலும் பழைய பார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

இந்தியா மிரட்டல்:
அந்த நிலைமையில் அவருடன் பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (27) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கி வெளுத்து வாங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 29 (16) ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்று நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 211/4 ரன்கள் விளாசியது.

அதை தொடர்ந்து 212 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பாவமா 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கி 1 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்க விட்ட ட்வயன் பிரெடோரியஸ் 29 (13) ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த குயின்டன் டி காக் 3 பவுண்டரியுடன் 22 (18) ரன்களில் அவுட்டானதால் 81/3 என தென் ஆப்பிரிக்கா தடுமாற்றமான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

மிரட்டிய மில்லர்:
அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ராசி டேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் ஒருசில ஓவர்களுக்கு பின் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து வெற்றிக்கு போராடினார்கள். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் குஜராத்தின் கருப்பு குதிரையாக செயல்பட்ட டேவிட் மில்லர் அந்த பார்மை கொஞ்சம் கூட நழுவ விடாமல் இந்தியாவை தெறிக்க விடும் வகையில் பேட்டிங் செய்ததால் தென்னாபிரிக்கா வெற்றி பாதைக்கு திரும்பியது. குறிப்பாக கடைசி 5 ஓவரில் 64 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்ஷல் படேல் வீசிய 16-வது ஓவரில் 22 ரன்களை விளாசிய இந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 18-வது ஓவரிலும் 22 ரன்களை பறக்கவிட்டு இந்தியாவின் வெற்றியை பறித்தது.

9-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி மிரட்டலாக பேட்டிங் செய்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை வெற்றிகரமாக எடுத்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.

அந்த அளவுக்கு மிரட்டலாக பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றியை பறித்த ராசி வேன் டெர் டுஷன் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்களும் டேவிட் மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (31) ரன்களும் எடுத்து முரட்டுத்தனமான பினிஷிங் கொடுத்தனர். அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்து இந்தியாவிற்கு உண்மையான போட்டியை காட்டியுள்ளது.

சொதப்பிய இந்தியா:
மறுபுறம் பேட்டிங்கில் அட்டகாசமாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சில் முதல் 10 ஓவர்கள் வரை ஓரளவு சிறப்பாக பந்துவீசி வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்து ரன்ரேட்டை கொஞ்சம் கூட சரிய விடாமல் அசத்தலாக பேட்டிங் செய்த மில்லர் – டுஷன் ஆகியோரை அவுட் செய்யாமல் விட்டது மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக படுமோசமாக பந்துவீசி சொதப்பியதால் இந்த படுதோல்வி பரிசாக கிடைத்தது. குறிப்பாக ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் போன்ற கடைசி நேரத்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய பவுலர்கள் கூட இந்த போட்டியில் மோசமாக பந்துவீசி இந்தியாவிற்கு சொந்த மண்ணில் தலைகுனிவை ஏற்படுத்தினர்.

Advertisement