IND vs RSA : கோப்பையை வெல்லுமா இந்தியா, பெங்களூரு மைதான வரலாறு – பிட்ச் ரிப்போர்ட் இதோ

Bengaluru Chinnasamy Cricket Ground Stadium
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தி அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்து 2 – 0 என தொடரில் முன்னிலை பெற்று அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் தோல்விகளுக்கு அஞ்சாத இளம் இந்திய அணியினர் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற அடுத்த 2 போட்டிகளில் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபத்தில் சாய்ந்து விடமாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

அதனால் 2 – 2* சமனில் இருக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19இல் நடைபெறுகிறது. அதில் கடைசி முயற்சியாக முழுமூச்சுடன் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு மேலும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகியுள்ளது.

வெல்லுமா இந்தியா:
இந்திய அணியை பொறுத்தவரை முதல் 2 போட்டிகளில் நிலவிய மோசமான பந்துவீச்சு தான் அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணமென்று உணர்ந்த இந்திய பவுலர்கள் அதற்கடுத்த 2 போட்டிகளில் அப்படியே நேர்மாறாக பொறுப்புடனும் துல்லியமாகவும் பந்துவீசி தென் ஆப்பிரிக்காவை மடக்கிப் பிடித்து 2 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் மிகப்பெரிய புத்துணர்ச்சி அடைந்துள்ள அவர்கள் கடைசி போட்டியில் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் மானத்தை காப்பாற்ற போராட உள்ளனர். அதேபோல் பேட்டிங்கை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மிடில் ஆர்டர் வலுவாக இருந்தாலும் டாப் ஆர்டர் சுமாராக இருக்கிறது. எனவே ருதுராஜ், ஷ்ரேயஸ் ஐயர், கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த முக்கியமான கடைசி போட்டியில் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்க வேண்டியுள்ளது.

பெங்களூரு மைதானம்:
இந்த முக்கியமான போட்டி பெங்களூருவில் உள்ள பிரபலமான எம்.சின்னசாமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. கடந்த 1969இல் உருவாக்கப்பட்டு தற்போது 40,000 ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20, ஐபிஎல் என பல வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.

- Advertisement -

1. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 7 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளன. ஆனால் சேசிங் செய்த அணிகள் 5 போட்டிகளில் வென்றுள்ளன.

2. இங்கு கடந்த 2012இல் முதல் முறையாக நடைபெற்ற டி20 போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இருப்பினும் 2016இல் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வென்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

3. அதேபோல் 2017இல் இங்கிலாந்துக்கு எதிராக 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2019இல் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கு முதலும் கடைசியுமாக கடந்த 2019இல் களமிறங்கிய இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இந்த போட்டியில் வெற்றிபெற இந்தியா கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த பெங்களூர் சின்னச்சாமி மைதானம் இந்தியாவில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் அளவில் சற்று சிறியதாகும். அதனாலேயே லேசாகப் பவர் கொடுத்து பேட்ஸ்மேன்கள் தொட்டாலே சிக்சர்கள் பறக்கக்கூடிய இந்த மைதானத்தில் வரலாற்றில் நிறைய போட்டிகளில் பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் இங்கு காணப்படும் பிட்ச் 2 இன்னிங்ஸ்களிலும் அதிக அளவில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை அணிக்கு சாஹல் செட் ஆக மாட்டாரு. அவருக்கு பதிலாக இவரை சேருங்க – மஞ்சரேக்கர் கருத்து

இருப்பினும் ஆரம்பகட்ட புதிய பந்தை ஸ்விங் செய்யும் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் இங்கே விக்கெட்டுகள் கிடைக்காமல் இருக்காது. அதேபோல் மிடில் ஓவர்களில் திறமையை வெளிப்படுத்தும் சுழல்பந்து வீச்சாளர்களும் இந்த மைதானத்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியும். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 166 ஆகும். மேலும் வரலாற்றில் இங்கு சேசிங் செய்த அணிகள் நிறைய வென்றுள்ளன. அத்துடன் இது இரவு நேர போட்டி என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் யோசனையின்றி பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement