IND vs RSA : பெங்களூருவில் அடித்து நொறுக்கிய மழையால் 5வது போட்டி ரத்து – அப்போ கோப்பை, தொடர் நாயகன் விருது வென்றது யார்

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று துவங்கியது. கேப்டன் ரோகித் சர்மா போன்ற ஒரு சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட இந்த தொடரில் கேஎல் ராகுல் காயத்தால் விலகியதால் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணிக்கு டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்த தென்னாப்பிரிக்கா 12 வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தி தலை குனிய வைத்தது.

அதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான இந்தியா அதற்கு அஞ்சாமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தது. அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்ந்து விட மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

- Advertisement -

கடைசி போட்டி:
அதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த இந்திய ரசிகர்கள் சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு அடி பணியாமல் இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்து இந்த அளவுக்கு போராடியதால் கடைசி போட்டியிலும் வென்று கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்தனர். அதேபோல் தென் ஆப்ரிக்காவும் கடைசி போட்டியில் வென்று வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைக்க தயாரானது. அதனால் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை என்ற சூழ்நிலையில் இந்த தொடரின் மாபெரும் கடைசி மற்றும் 5-வது போட்டி ஜூன் 19இல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது.

முன்னதாக இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் 6.30 மணிக்கு மழை குறுக்கே வராத காரணத்தால் வழக்கம்போல டாஸ் வீசப்பட்டது. அதில் தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா கடந்த போட்டியில் காயமடைந்ததால் இப்போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேசவ் மகாராஜ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

- Advertisement -

கெடுத்த மழை:
ஆனால் டாஸ் வீசிய பின் எதிர்பாராத வகையில் ஜோராக வந்த மழை போட்டியை கெடுக்க துவங்கினாலும் சிறிது நேரத்தில் ஓய்ந்தது. அதனால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி 7.50 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்டது போல் துவங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய 2 சிக்சர்களை பறக்க விட்ட இஷான் கிசான் 15 (7) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் ருத்ராஜ் 10 (12) ரன்களில் அவுட்டானார். அதனால் 3.3 ஓவர்களில் 28/2 என தடுமாற்றமான தொடக்கத்தை பெற்று இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது மீண்டும் மழை வந்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை எப்படியாவது நின்றுவிட வேண்டும் என்று மைதானத்துக்கு வந்து ரசிகர்கள் பிரார்த்தித்தனர். ஆனால் அதற்கு செவி சாய்க்காத மழை அடித்து நொறுக்கி மைதானம் முழுவதும் தண்ணீரை நிரப்பியது. இறுதியில் இரவு 10.10 மணிவரை மழை விடாமல் பெய்ததால் வேறு வழியின்றி விதிமுறைப்படி இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

கோப்பை யாருக்கு:
இப்போட்டியில்வென்றால் கோப்பை என்ற நிலைமையால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு அனல் பறக்க விடாமல் போட்டியை தடுத்து நிறுத்தி கொட்டி தீர்த்த மழை ஏமாற்றத்தையே கொடுத்தது.

அந்த நிலைமையில் 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 2 – 2 என இந்த தொடரில் சமனில் இருப்பதால் அடிப்படை விதி முறைப்படி இரு அணிகளும் இந்த தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இருப்பினும் இந்த தொடரில் 6 விக்கெட்டுகள் எடுத்த சீனியர் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தொடர் நாயகன் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

Advertisement