
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் நவம்பர் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் கௌதாத்தியில் நடைபெற உள்ளது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு சவாலைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்தத் தொடரில் விளையாடுவதற்கான தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தொடரில் கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியில் முதலில் உணவு இடைவேளைக்கு பதிலாக தேநீர் இடைவெளி விடப்படும் என்று தெரிய வருகிறது. பொதுவாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் காலை 9.30 மணிக்கு துவங்கும்.
அங்கிருந்து 2 மணி நேரத்திற்கு பின் 11.30 – 12.10 வரை 40 நிமிடங்கள் உணவு இடைவெளி விடப்படும். அடுத்ததாக மதியம் 2.10 – 2.30 வரை 20 நிமிடங்கள் தேநீர் இடைவேளை கொடுக்கப்படும். இறுதியாக போட்டி மாலை 4.30 மணிக்குள் முடிக்கப்படும். ஒருவேளை அன்றைய நாளில் 90 ஓவர்கள் வீசி முடிக்காவிட்டால் எக்ஸ்ட்ரா அரை மணி நேரம் வழங்கப்படுவது வழக்கமாகும்.
ஆனால் 2வது போட்டி நடைபெறும் கௌகாத்தி இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. அங்கே வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான குளிர் நிலவும் என்பதுடன் சூரிய அஸ்தமனம் சற்று முன்னதாகவே நிகழும். அப்படிப்பட்ட கௌகாத்தியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இம்முறை டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
எனவே அங்குள்ள கால சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் போட்டி காலை 9.00 மணிக்கு துவங்கும். அடுத்ததாக உணவு இடைவெளிக்குப் பதிலாக 11 – 11.20 மணி வரை தேநீர் இடைவேளை விடப்படும். உணவு இடைவெளி மதியம் 1.20 – 2 மணி வரை விடப்பட்டு போட்டி 4 மணிக்கு முடிவடையும் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. தென்னாப்பிரிக்கா வாரியத்துடன் கலந்து ஆலோசித்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவின் இந்த ஆட்டத்தால் சுப்மன் கில்லுக்கு தான் நல்லது – பார்த்திவ் பட்டேல் கருத்து
சொல்லப்போனால் ஏற்கனவே சௌகாத்தியில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் மேற்கண்ட முறையில் நடைபெறுகிறது. அந்த வினோதமான நடைமுறை முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரங்கேற உள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறுகையிலல். “கௌகாத்தியில் முன்னதாகவே சூரிய அஸ்தமனம் நிகழும் என்பதே இதற்கான காரணம். நாங்கள் தேனீர் இடைவெளியை மாற்றம் முடிவெடுத்துள்ளது இதுவே முதல் முறை. அப்படி செய்வதால் களத்தில் விளையாடுவதற்கு எக்ஸ்ட்ரா நேரத்தை பெற முடியும்” என்று கூறினார்.