கண் மூடி திறப்பதற்குள் முடிந்த 2வது டெஸ்ட்.. 92 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை

24 Capte Town Test
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாபிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா 2வது போட்டியில் வென்ற 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த அணியாக மோசமான உலக சாதனை படைத்தது. அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

- Advertisement -

கண் மூடி திறப்பதற்குள்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்கள் மட்டுமே போராடி எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 46, கேப்டன் ரோஹித் சர்மா 39 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா, நன்ரே பர்கர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாபிரிக்கா 2வது இன்னிங்சில் முடிந்தளவுக்கு போராடியும் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஐடன் மார்க்கம் அதிரடியாக விளையாடி சதமடித்து 106 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில் 79 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 17*, ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா தொடரை சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. ஆனால் ஜனவரி 3ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய இப்போட்டி 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மிகவும் வேகமாக முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

இதையும் படிங்க: போன மேட்ச்ல ரன்ஸ் வழங்கினாலும்.. இப்போ கம்பேக் கொடுக்க அதை செஞ்சேன்.. ஆட்டநாயகன் சிராஜ் பேட்டி

குறிப்பாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 153/4 என்ற நிலையில் இருந்து கண் மூடி திறப்பதற்குள் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மொத்தத்தில் வெறும் 642 பந்துகளில் முடிந்த இந்த போட்டி 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் மிகவும் குறைந்த நேரத்தில் நிறைவு பெற்ற போட்டியாக 92 வருட சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. தென்னாபிரிக்கா – இந்தியா கேப் டவுன் : 642 பந்துகள், 2024*
2. ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா : 656 பந்துகள், மெல்போர்ன், 1932
3. வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து : 672 பந்துகள், பிரிட்ஜ்டவுன், 1935

Advertisement