சவாலான தெ.ஆ டி20 தொடரை இந்தியா வெல்லுமா? வரலாற்று புள்ளிவிவரம்.. அதிக ரன்ஸ், விக்கெட்ஸ் பட்டியல்

IND vs RSA Preview
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வெற்றியுடன் நிறைவு செய்த இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் முதலாவதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

மறுபுறம் ஐடன் மார்க்ரம் தலைமையில் டேவிட் மில்லர், ஹென்றிக்ஸ், க்ளாஸென் போன்ற அதிரடி வீரர்களை கொண்டுள்ள தென்னாபிரிக்கா சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், கில் போன்ற இளம் வீரர்களுடன் ஜடேஜா, சிராஜ், குல்தீப் யாதவ் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்களையும் இந்தியா கொண்டுள்ளது.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:
எனவே தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா ஐசிசி நாக் அவுட்டில் தடுமாறினாலும் இருதரப்பு தொடர்களில் மிரட்டும் என்பதால் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த போராடும் என்று நம்பலாம். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை மொத்தம் 24 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 13 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

குறிப்பாக இத்தொடர் நடைபெறும் தென்னாபிரிக்க மண்ணில் இவ்விரு அணிகளும் 7 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 5 வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. தென்னாபிரிக்கா 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 3 இந்திய வீரர்களாக ஷிகர் தவான் (143), எம்எஸ் தோனி (135), ரோஹித் சர்மா (135) திகழ்கின்றனர்.

- Advertisement -

அதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் எந்த இந்திய வீரர்களும் சதமடிக்காத நிலையில் அதிக அரை சதங்கள் (2) அடித்த வீரராக ரோகித் சர்மா உள்ளார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் மணிஷ் பாண்டே : 79*, 2018. தென்னாபிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 2 இந்திய பவுலர்கள்ளாக புவனேஸ்வர் குமார் (7) மற்றும் ஆர்பி சிங் (4) திகழ்கிறார்கள்.

இதையும் படிங்க: அந்த வெற்றி உலக கோப்பைக்கு சமம்.. எப்படியாவது ஜெயிச்சுட்டு வாங்க.. இந்திய அணிக்கு ஸ்ரீசாந்த் கோரிக்கை

அதே போல தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த ஒரே இந்திய பவுலராகவும் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய பவுலராகவும் புவனேஸ்வர் குமார் (5/24, ஜோஹன்ஸ்பர்க், 2018) சாதனை படைத்துள்ளார். மேலும் தென்னாபிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச டி20 ஸ்கோர் : 203/5, ஜோஹன்ஸ்பர்க், 2018

Advertisement