மீண்டும் கழற்றி விடப்படும் அஸ்வின்? முதல் டெஸ்ட் மைதான பராமரிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்

Ashwin Jadeja
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதவிருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா புதிய சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சாதாரணமாகவே தென்னாப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் வேகத்துக்கு சாதகமாக இருப்பது வழக்கமாகும். அந்த வகையில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கும் இத்தொடரின் முதல் போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானமும் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செஞ்சூரியன் மைதானத்தின் பிட்ச் வேகத்திற்கு அதிக சாதகமாக இருக்கும் என்று அதனுடைய தயாரிப்பாளர் பிரையன் பிளாய் கூறியுள்ளார்.

- Advertisement -

கழற்றி விடப்படும் அஸ்வின்:
அதனால் கடைசி 2 நாட்களில் மட்டுமே ஸ்பின்னர்களுக்கு லேசான உதவி கிடைக்கும் என்று தெரிவிக்கும் அவர் முதலிரண்டு நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலிரண்டு நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இருப்பினும் 4 நாட்கள் சூரியன் தெரியலாம்”

“எனவே ஸ்பின்னர்களுக்கும் லேசான உதவி கிடைக்கலாம். ஆனால் மழை எந்தளவுக்கு பெய்யும் என்பது என்னால் துல்லியமாக சொல்ல முடியாது” என்று கூறினார். இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 ஸ்பின்னருடன் மட்டுமே விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அது போன்ற சூழ்நிலையில் கண்டிப்பாக ஸ்பின்னராக பேட்டிங்கில் சற்று அதிகமாக அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் இதை விட மிகவும் முக்கிய போட்டியான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுழலுக்கு சாதகமாக இருந்த ஓவல் மைதானத்திலேயே ரவிச்சந்திரன் அஸ்வினை பெஞ்சில் அமர வைத்து தோல்வியை சந்தித்த பெருமை தற்போதைய ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணி நிர்வாகத்திற்கு சேரும்.

இதையும் படிங்க: 7-8 வயசு இருக்கும்போதே ரெய்னா எனக்கு அந்த கிஃப்ட் குடுத்தாரு – சி.எஸ்.கே அணிக்காக தேர்வான சமீர் ரிஸ்வி நெகிழ்ச்சி

அதே போல 2023 உலகக் கோப்பை ஃபைனலிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அந்த வரிசையில் இத்தொடரின் முதல் போட்டியிலும் அஸ்வின் விளையாடுவது மிகவும் சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இன்னும் 11 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை தாண்டி சாதனை படைக்க ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்பது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement