இந்தியா – தெ.ஆ முதல் டெஸ்ட் நடைபெறும் சென்சூரியன் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

Centurion Stadium
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையில் பும்ரா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் அடங்கிய இந்திய அணி முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு தொடரை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

மறுபுறம் தெம்பா பவுமா தலைமையில் ரபாடா, மார்க்ரம், கோட்சி போன்ற தரமான வீரர்களை கொண்ட தென்னாபிரிக்கா தங்களுடைய சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றும் முனைப்புடன் இத்தொடரில் விளையாட உள்ளது. வரலாற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 15 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா 17 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. 10 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
குறிப்பாக தென்னாப்பிரிக்க மண்ணில் 1992 முதல் இதுவரை 8 தொடர்களில் விளையாடியுள்ள இந்தியா 7 தோல்விகளையும் 2011இல் தோனி தலைமையில் முதலும் கடைசியுமாக 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய 23 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 12 வெற்றிகளை பெற்றது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

சென்சூரியன் மைதானம்:
கடந்த 1992இல் தோற்றுவிக்கப்பட்டு 20000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் 1995 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் நடைபெற்ற 28 போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 22 வெற்றி 3 தோல்வி 3 ட்ராவை பதிவு செய்து வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. மறுபுறம் இம்மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளில் இந்தியா 1 வெற்றியும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (211), அதிகபட்ச ஸ்கோர் (153) அடித்த இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். அதே போல அதிக விக்கெட்டுகள் (13), சிறந்த பவுலிங்கை (5/44) பதிவு செய்துள்ள இந்திய பவுலராக முகமது ஷமி சாதனை படைத்துள்ளார். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் : 459, 2010இல்

பிட்ச் ரிப்போர்ட்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இம்மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்தி அவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள். அதே சமயம் அந்த நிலைமைகளை சமாளித்து நங்கூரமாக நிற்கும் பேட்ஸ்மேன்கள் பந்து பழையதாக மாற மாற பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: தெ.ஆ மண்ணில் இந்திய தடுமாற இது தான் காரணம்.. அதை மட்டும் செஞ்சா ஜெயிச்சுடலாம்.. டு பிளேஸிஸ் கருத்து

மேலும் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் லேசான உதவியை பெறுவார்கள் என்று மைதான பராமரிப்பாளர் பிரையன் ப்ளாய் தெரிவித்துள்ளார். இங்கே கடைசியாக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம். அதே சமயம் இப்போட்டியில் மழைக்கான வாய்ப்பிருப்பதால் பந்து வீசுவதும் நல்ல முடிவாகவே இருக்கும்.

Advertisement