IND vs PAK : இந்தியா – பாக் போட்டி நடக்கும் மைதானம் எப்படி – வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் முதல் சுற்று முடிந்து சூப்பர் 12 சுற்று துவங்கியுள்ளது. இதில் அக்டோபர் 23ஆம் தேதியன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறுகிறது. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதும் நிலையில் 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது.

அதனால் அவமானத்தைச் சந்தித்த இந்தியா அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மீண்டும் தோல்வியை சந்தித்து வெளியேறியது. எனவே அந்த 2 வரலாற்று தோல்விகளுக்கு இம்முறை தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்க இந்தியா தயாராகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

பிரம்மாண்டமான மெல்போர்ன்:
இன்று என்னதான் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உலகின் பெரிய மைதானம் கட்டப்பட்டாலும் கடந்த 1853இல் உருவாக்கப்பட்டு 1877 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் மெல்போர்ன் மைதானத்திற்கு நிகராக முடியாது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பழமையும் வரலாறும் கொண்ட இம்மைதானம் 1985இல் புதுப்பிக்கப்பட்டு தற்போது 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து நேரடியாக பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

1. இம்மைதானத்தில் அமர்ந்து இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்ப்பது ரசிகர்களுக்கு பேரானந்தமாக இருக்கும் என்ற நிலையில் இங்கு கடந்த 2008 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 15 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 9 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பிடத்தக்க அம்சமாக 2017 முதல் இங்கு அனைத்து போட்டிகளிலும் சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன.

3. இம்மைதானத்தில் 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் சந்தித்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இங்கு பாகிஸ்தான் விளையாடிய 1 போட்டியில் தோற்றது. ஆனால் இவ்விரு அணிகளும் இம்மைதானத்தில் முதல் முறையாக இப்போது தான் மோதுகின்றன.

- Advertisement -

4. இந்த மைதானத்தில் வரலாற்றில் அதிக டி20 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் : ஆரோன் பின்ச் – 334 ரன்கள். இந்தியா சார்பில் இங்கு அதிகபட்சமாக விராட் கோலி 90 ரன்களை எடுத்துள்ளார். இங்கு அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள பேட்ஸ்மேன் : டேவிட் வார்னர் – 89. இந்திய பேட்ஸ்மேன் : ரோஹித் சர்மா – 60

5. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளராக கேன் ரிச்சர்ட்சன் (9 விக்கெட்கள்) உள்ளார். இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களாக ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன் குமார் (தலா 3) ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மெல்போர்ன் நகரில் கடந்த ஒரு வாரமாகவே 80% மழை குறிப்பாக மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும் தற்போது 25% என்றளவுக்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதால் குறைந்தபட்சம் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காணும் வகையில் இப்போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாது கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்களும் வருடம் முழுவதும் நடைபெறுவதால் பிட்ச்கள் அடிக்கடி மாற்றப்படும். அந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருக்குமென மைதான பராமரிப்பாளர் மைக்கேல் சல்வடோர் கூறியுள்ளார். அதற்கேற்றார் போல் இம்மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 139 ஆகும்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையின் சிறந்த கேட்ச்சா? சூப்பர்மேனாக பறந்த நியூசி வீரர் – ரசிகர்கள் வியக்கும் வீடியோ இதோ

மேலும் இயற்கையாகவே இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல பவுன்ஸ் பெற்று பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய வேகத்தை கணித்து பவுன்ஸ்க்கு ஈடுகொடுக்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களையும் குவிக்க முடியும். இருப்பினும் இங்கு சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள். இங்கு 2017க்குப்பின் அனைத்துப் போட்டிகளிலும் சேசிங் செய்த அணிகள் வென்றதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement