இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியானது கண்டி நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவில் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு எதிராக அவர் அந்த மாபெரும் சாதனையை பதிவு செய்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டி ஆரம்பித்ததில் இருந்தே அனல் பறக்க பந்துவீசிய அவர் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த போது அவரை கிளீன் போல்ட் செய்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் எண்ணிக்கை 27-ஆக இருந்தபோது நான்கு ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியையும் கிளீன் போல்ட் செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை ஒரே போட்டியில் போல்ட் செய்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஷாஹீன் அப்ரிடி படைத்துள்ளார்.
இதையும் படிங்க : IND vs PAK : முக்கிய மேட்ச்ல ஷமியை எடுக்காம தப்பு பண்ணீட்டீங்க, ரோஹித் – டிராவிட்டை விளாசிய 2 முன்னாள் வீரர்கள்
அதனை தொடர்ந்து இந்திய அணி 48 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐரையும், 66 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் விக்கெட்டையும் இழந்து தடுமாறியது. பின்னர் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது 100+ பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டினியால் மட்டுமே இந்திய 200 ரன்களை கடக்க முடிந்தது என்றே கூற வேண்டும். இஷான் கிஷன் 82 ரன்களில் அவுட் ஆக, சிறிது நேரத்தில் அதிரடியை துவங்கிய ஹர்திக் 87 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த ஜடேஜா, ஷர்துல் தாகூர் எல்லாம் பெரிதாக ரன் எடுக்காததால், இந்திய அணி 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை குவித்தது.