39 வருட இந்தியா – பாக் ரசிகர்களின் கனவை மீண்டும் தூளாக்கிய இலங்கை.. சிஎஸ்கே போல அசத்தல் சாதனை

SL Chennai
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மழையால் குறைக்கப்பட்ட 42 ஓவர்களின் முடிவில் 252/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்துல்லா சபிக் 52 ரன்களும் முகமது ரிஸ்வான் 86* ரன்களும் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 252 ரன்களை சேசிங் செய்த இலங்கையின் நிசாங்கா 29, குசால் பெரேரா 17 ரன்கள் எடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் குஷால் மெண்டிஸ் 91 (87) ரன்களும் சமரவிக்ரமா 48 (51) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கேப்டன் சனாகா 2, டீ சில்வா 5 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட போதிலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற அசலங்கா கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 2 ரன்கள் விளாசி 49* ரன்கள் குவித்து கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சிஎஸ்கே மாதிரி:
அதனால் இப்திகார் அகமது 3, சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் போராடி தோற்ற பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது. அதனால் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளது. ஆனால் என்ன தான் இலங்கை வந்தாலும் ஃபைனலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதையே அவ்விரு நாட்டு ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம்.

குறிப்பாக 1984 முதல் இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஒரு முறை கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் மோதியதே கிடையாது. எனவே இம்முறையாவது அந்த போட்டி நடைபெறுமா என்று எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்களின் கனவை மீண்டும் இலங்கை உடைத்துள்ளது. இதுவரை ஆசியக் கோப்பை வரலாற்றில் 16 தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் ஒருமுறை கூட இந்தியா – பாகிஸ்தான் ஃபைனலுக்கு வந்ததில்லை.

- Advertisement -

அதிலும் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவை ஃபைனலுக்கு தகுதி பெற விடாமல் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து வெளியேற்றிய இலங்கை இம்முறை பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. அத்துடன் இதன் வாயிலாக ஒருநாள் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக முறை ஃபைனலுக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையும் இலங்கை படைத்துள்ளது.

இதையும் படிங்க: அவர்மேல் நான் முழு நம்பிக்கை வச்சிருந்தேன்.. ஆனா கடைசில எல்லாம் தப்பா போச்சி – பாபர் அசாம் வருத்தம்

அதாவது 1984இல் இருதரப்பு தொடராக ஆசிய கோப்பை நடைபெற்ற நிலையில் பல தரப்பு அணிகள் பங்கேற்ற தொடர்களில் 1986, 1988, 1991, 1995, 1997, 2000, 2004, 2008, 2010, 2014, 2023* ஆகிய 11 தொடர்களில் இலங்கை ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வகையில் ஐபிஎல் தொடரில் அதிக முறை ஃபைனலுக்கு தகுதி பெற்ற அணியாக சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் போல இலங்கையும் அசத்தியுள்ளது என்றே சொல்லலாம். இலங்கைக்கு அடுத்தபடியாக 1988, 1991, 1995, 1997, 2004, 2008, 2010, 2018, 2023* ஆகிய 9 தொடர்களில் ஃபைனலுக்கு தகுதி பெற்று இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது.

Advertisement