ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 171/5 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியா 18.5 ஓவரிலேயே 174/4 ரன்களை எடுத்து பாகிஸ்தானை இத்தொடரில் 2வது முறையாக தோற்கடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
எதிரியா இருக்க தகுதி வேணும்:
இதையும் சேர்த்து கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 சர்வதேச போட்டிகளில் இந்தியா 7 தொடர் வெற்றிகளை பெற்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது. அந்த நிலையில் பரம எதிரி பாகிஸ்தான் எந்தளவுக்கு இந்தியாவுக்கு போட்டியைக் கொடுக்கிறது என்று கேப்டன் சூரியகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இனிமேலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எதிரி அல்லது போட்டியைக் கொடுக்கும் அணி கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
ஏனெனில் சமமான வெற்றியைப் பெறுபவர்களையே எதிரி என்று சொல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு தலைப்பட்சமாக வெல்வதால் தங்களுடைய எதிரியாக இருக்க தகுதியற்றவர்கள் என்றும் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
சூரியகுமார் வெளிப்படை:
“நீங்கள் (செய்தியாளர்கள்) முதலில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றிய கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும். என்னைப் பொறுத்த வரை 2 அணிகள் 15 – 20 போட்டிகளில் விளையாடி அதனுடைய ஸ்கோர்லைன் 7 – 7 அல்லது 8 – 7 என்ற கணக்கில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவர்களை எதிரி என்றழைக்க முடியும். 10 – 1 என்ற கணக்கில் இருப்பதெல்லாம் போட்டி கிடையாது”
இதையும் படிங்க: அவர் ரோபோ இல்ல.. அபிஷேக் – கில் நீரும் நெருப்பும் மாதிரி பாகிஸ்தானை அடிச்சாங்க.. கேப்டன் சூரியகுமார் பேட்டி
“நாங்கள் அவர்களை (பாகிஸ்தான்) விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறோம் என்று நினைக்கிறேன். பந்து வீச்சு கோணத்திலும் அவர்களை விட நாங்கள் நன்றாகவே செயல்படுகிறோம்” என்று சொன்னது வைரலாகி வருகிறது. அவர் கூறுவது போல ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் 12 – 3 என்ற கணக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



