IND vs NZ : 3வது டி20 நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Motera-1 cricket Stadium ground
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் போராடி வென்றது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்ட நியூசிலாந்து 2வது போட்டியில் பேட்டிங்கில் 100 ரன்களைக் கூட தாண்டாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே பேட்டிங்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இப்போட்டியில் வென்று ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து போராட உள்ளது.

IND-vs-NZ

- Advertisement -

மறுபுறம் முதலிரண்டு போட்டிகளில் ஸ்பின்னர்கள் அசத்தலாக செயல்பட்டும் வேககப்பந்து வீச்சாளர்களும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொதப்பலாக செயல்பட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. எனவே இப்போட்டியில் வென்று தன்னை சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபிக்க அந்தத் துறைகளில் இந்தியா முன்னேறி போராட வேண்டியது அவசியமாகிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி இரவு 7 மணிக்கு அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

அஹமதாபாத் மைதானம்:
மோட்டேரா என்ற பெயருடன் உலகப் புகழ்பெற்றிருந்த இந்த மைதானம் 2021இல் நவீன வசதிகளுடன் 1,32,000 ரசிகர்கள் அமரும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய சாதனை மைதானமாக உருவாக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை இங்கு நடைபெற்ற 6 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி (258 ரன்கள்) உள்ளார். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக ஷார்துல் தாகூர் (8) உள்ளார்.

Narendra Modi Stadium Ahamedabad

இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா – 224/2, இங்கிலாந்துக்கு எதிராக, 2021. இந்த மைதானத்தில் வெற்றிகரமாக அதிகபட்ச இலங்கை சேசிங் செய்த அணி : இந்தியா – 166/3, இங்கிலாந்துக்கு எதிராக, 2021. இங்கு வெற்றிகரமாக அதிகபட்ச இலக்கை கட்டுப்படுத்திய அணி : இந்தியா – 185/8, இங்கிலாந்துக்கு எதிராக, 2021

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
கடந்த போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக அமைந்து ஒரு சிக்சர் கூட அடிக்க விடாமல் வீரர்களை விட அதிகமாக விளையாடியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த நிலைமையில் இந்த மைதானத்தில் மொத்தம் 11 பிட்ச்கள் உள்ளன. அதில் 6 செம்மண்ணாலும் 5 கருமண்ணாலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் செம்மண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச்கள் காய்ந்த தன்மையுடன் மெதுவாக இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமாக கை கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக 2021இல் இங்கு நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடர் ஒன்றரை நாட்களுக்குள் முடியும் அளவுக்கு ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதன் பின் கருமண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச்கள் சமீப காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நல்ல பவுன்ஸ் வேகம் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி பெரிய ரன்களை அதிரடியாக குவிப்பார்கள். எனவே இது டி20 போட்டி என்பதால் இம்முறை அந்த பிட்ச் தான் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

போதாகுறைக்கு மைதானத்தின் பவுண்டரிகள் நேராக 75 – 80, பக்கவாட்டில் 58 – 70 மீட்டராகும். அதன் காரணமாக இப்போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று உறுதியாக நம்பலாம். அதே சமயம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். மிடில் ஓவரில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

motera

இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174 ஆகும். மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 6 போட்டிகளில் 3இல் முதலில் பேட்டிங் செய்த அணியும் 3இல் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதால் பனியின் தாக்கத்தை கருதி டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க: IND vs AUS : டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – வெளியான அறிவிப்பு

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று அகமதாபாத் நகரில் 20 – 15 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்றும் மழைக்கான வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement