IND vs NZ : முதல் டி20 நடக்கும் வெலிங்டன் மைதானம் எப்படி? இந்தியாவின் செயல்பாடுகள், புள்ளிவிவரம் – பிட்ச் ரிப்போர்ட் இதோ

Wellington Stadium Ground
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது. அந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குவிந்துள்ள நிலையில் அடுத்ததாக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நிகராக பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ள இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நவம்பர் 18ஆம் தேதியன்று வெலிங்டன் நகரில் துவங்குகிறது. அதற்காக ஹர்திக் பாண்டியா தலைமையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் முதல் போட்டியிலேயே வென்று ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை வகிக்க போராட உள்ளனர். இருப்பினும் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் நியூசிலாந்து இந்த தொடரிலும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்தியாவுக்கு சவால் கொடுத்து சொந்த மண்ணில் கோப்பையை வென்று தலை நிமிர தயாராகியுள்ளது.

- Advertisement -

வெலிங்டன் மைதானம்:
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ள இத்தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருக்கும் ரீஜினல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இந்த அழகிய மைதானத்தில் 2006 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வரலாற்றில் இங்கு இதுவரை நடைபெற்ற 15 போட்டிகளில் 9 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 6 போட்டிகளில் மட்டும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன.

1. இந்த மைதானத்தில் 3 போட்டிகளில் இதற்கு முன் நியூசிலாந்தை எதிர்கொண்டுள்ள இந்தியா 1 வெற்றி 2 தோல்வியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2009இல் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2019இல் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

2. இருப்பினும் கடைசியாக கடந்த 2020இல் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்று அசத்தியது. எனவே வரலாற்றில் நிறைய சவால்களை கொடுத்துள்ள இம்மைதானத்தில் நியூசிலாந்தை இம்முறை இந்தியா கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

3. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 67
2. மனிஷ் பாண்டே : 50
3. யுவராஜ் சிங் : 50

- Advertisement -

4. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்களாக முறையே இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா, ஷார்துல் தாகூர், யுஸ்வென்ற சஹால் ஆகியோர் (தலா 2 விக்கெட்கள்) உள்ளனர்.

பிட்ச் ரிப்போர்ட்:
பொதுவாகவே நியூசிலாந்தில் இருக்கும் மைதானங்கள் அளவில் சிறியதாக இருக்கும் என்றாலும் இந்த மைதானத்தில் இதர நாட்களில் ரக்ஃபி போன்ற இதர விளையாட்டுகள் நடைபெறுகிறது. அதனாலேயே இம்மைதானம் சற்று பெரிதாக இருந்தாலும் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும். எனவே அதில் தேர்ச்சி பெற்ற பேட்ஸ்மேன்கள் ஆரம்பகட்ட சவாலான சூழ்நிலைகளை சமாளித்தால் பெரிய ரன்களை எளிதாக குவிக்கலாம். மேலும் இங்கு வெளிப்புற மைதானம் நல்ல வேகத்துடன் இருக்கும் என்பதால் டைமிங் கொடுத்த அடிக்கும் பேட்ஸ்மேன்கள் சாதகத்தை சந்திப்பார்கள்.

அதே சமயம் இந்த மைதானத்தில் மிட் விக்கெட் பவுண்டரியின் அளவு மிகவும் பெரியது என்பதால் அதை பயன்படுத்தி மிடில் ஓவர்களில் திறமையை வெளிப்படுத்தும் ஸ்பின்னர்கள் எளிதாக விக்கெட்டுகளை எடுக்கலாம். மேலும் இப்போட்டி நடைபெறும் நாளன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டலாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்கலாம்.

முன்னதாக வரலாற்றில் இங்கு நடைபெற்ற 15 டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 162 ஆகும். அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல பிட்ச்சை கொண்ட இம்மைதானத்தில் வரலாற்றில் அதிக போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement