IND vs NZ முதல் டி20’யில் விளையாட வரும் வருண பகவான் – போட்டி முழுமையாக நடக்குமா? விரிவான வெதர் ரிப்போர்ட் இதோ

Rain-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்தாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பிய இந்தியா வழக்கம் போல வெறும் கையுடன் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதில் பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024இல் நடைபெறும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைப்பதை பார்க்க முடிகிறது. அந்த நிலையில் உலகக் கோப்பை தோல்விக்காக துவளாமல் அதிலிருந்து மீண்டெழுவதற்காக பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது.

அதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை போலவே முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். சமீப காலங்களில் சீனியர் வீரர்கள் இல்லாமலேயே இருதரப்பு தொடர்களை வென்ற இளம் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் இத்தொடரிலும் வென்று 2024 டி20 உலக கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகிறார்கள். மேலும் கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா உலக சாதனை படைத்தது.

- Advertisement -

விளையாட வரும் வருணபகவான்:
எனவே அந்த சாதனையை நினைத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் இந்திய வீரர்கள் நவம்பர் 18ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே இந்த தொடரில் முன்னிலை பெற தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இத்தொடரின் முதல் போட்டி வெலிங்டன் நகரில் இருக்கும் ரீஜினல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. அதில் வெல்வதற்காக காத்திருக்கும் இருநாட்டு வீரர்களைப் போலவே மழையும் ஆவலுடன் காத்திருக்கிறது எனலாம்.

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் நிறைய போட்டிகள் மழையால் கை விடப்பட்ட நிலையில் அதன் அருகில் இருக்கும் நாடான நியூசிலாந்திலும் தற்போது அதே நிலைமை நிலவுகிறது. குறிப்பாக வெலிங்டன் நகரில் போட்டி நடைபெறும் நவம்பர் 18ஆம் தேதியன்று சராசரியாக 82% இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை வெலிங்டன் ரீஜனல் பார்க் மைதான பகுதிகளில் முறையே 92%, 93%, 85%, 95%, 77% என அதிகப்படியான சராசரியில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா என்பதில் மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதை சமீபத்திய உலகக் கோப்பையில் பார்த்தோம். அந்த வகையில் இப்போட்டி நடைபெறுவதற்கும் மழை கருணை காட்டும் என்று இருநாட்டு ரசிகர்களும் நம்புகிறார்கள். அதனால் முடிந்த அளவுக்கு 5 ஓவர்கள் வரை குறைத்து இப்போட்டியை நடத்தி முடிவை காண்பதற்காக நடுவர்கள் முயற்சிக்க உள்ளனர்.

ஆனால் நவம்பர் 18ஆம் தேதி முழுவதும் வெலிங்டன் நகரில் 97% – 100% வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் 15 – 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஈரப்பதமான காற்று வீசும் என்றும் தெரிய வருகிறது. அதன் காரணமாக இடையிடையே மழை விட்டாலும் கூட மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் நிலவினால் போட்டியை நடத்துவதில் பெரிய சிக்கல் ஏற்படும. எனவே மழை வழி விட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மைதான பராமரிப்பாளர்கள் தீயாக செயல்பட்டால் மட்டுமே இப்படி நடைபெறும் என்று கூறலாம்.

Advertisement