IND vs IRE : ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த இந்திய வாய்ப்பை பெற்ற உம்ரான் மாலிக், கனவு தொப்பியை யாரிடம் வாங்கினார் தெரியுமா

Umran Malik IND vs IRE
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடருக்குப் பின் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இங்கிலாந்து சென்றுள்ளதால் அவருக்கு உறுதுணையாக மற்றொரு ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் இந்த தொடருக்கு பயிற்சியாளராக செயல்படுகிறார். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட போகும் தரமான வீரர்களை கண்டறியும் தொடராக இது பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையில் ஜூன் 26-ஆம் தேதியன்று அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் இருக்கும் வில்லேஜ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த தொடரின் முதல் போட்டி துவங்கியது.

- Advertisement -

ஒருவழியாக உம்ரான்:
இரவு 8.30 மணிக்கே வீசப்பட்ட டாஸில் முதல் முறையாக இந்தியாவிற்கு கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியா சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் 5 டாஸ்களையும் கோட்டைவிட்ட ரிஷப் பண்ட் போல அல்லாமல் முதல் போட்டியிலேயே வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைவிட உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் ஒரு வழியாக இந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்குவதாக ஹர்திக் பாண்டியா அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2021இல் தமிழகத்தின் நடராஜன் காயத்தால் விலகியதால் ஹைதராபாத் அணிக்காக வாய்ப்பு பெற்ற ஒருசில போட்டிகளிலேயே 140 கி.மீ வேகப்பந்துகளை வீசிய அவர் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டை பெற்றார்.

அதனால் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு சற்றும் யோசிக்காமல் தக்கவைத்து இந்த வருடம் முழு வாய்ப்பையும் கொடுத்த ஹைதராபாத் நிர்வாகத்திற்கு பங்கேற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்த அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டார். மேலும் இந்த வருடம் தனது வேகத்தை அதிகப்படுத்திய அவர் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகப்பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்கவிட்டு பிரெட் லீ, வாஸ் உள்ளிட்ட ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்களின் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

ராசியான புவியிடம்:
அதிலும் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக வெறும் 22 வயதிலேயே சாதனை படைத்து ஆச்சரியப்படுத்தினார். அதுபோக ஹைதராபாத் பங்கேற்ற 14 போட்டிகளிலும் அதிவேகமான பந்துகளை வீசி அதற்காக 14 லட்சங்களை பரிசாக தட்டிச் சென்றார்.

அப்படி வேகத்தில் எதிரணிகளை மிரட்டிய அவருக்கு வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் உட்பட பல ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர். அதனால் சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு சீனியர் வீரர்கள் இருப்பதால் யோசித்துதான் வாய்ப்பளிக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கறாராக சொல்லிவிட்டார்.

அதனால் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா – விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையில் அயர்லாந்து மண்ணில் முதல் போட்டியிலேயே அவர் வாய்ப்பை பெற்றுள்ளார். அதிலும் தற்போதைய இந்திய அணியில் சீனியர் பவுலராக துல்லியத்திற்கும் தரத்திற்கும் பெயர்போன ராசியான பவுலராக கருதப்படும் புவனேஸ்வர் குமாரிடம் தனது முதல் இந்திய கனவு தொப்பியை உம்ரான் மாலிக் வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதன் வாயிலாக இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடும் 98-வது வீரர் என்ற பெருமையை பெற்ற அவர் ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்காக விளையாடும் 2-வது வீரர் என்ற பெயரை பர்வேஸ் ரசூலுகுப்பின் பெற்றார்.

வெளுக்கும் மழை:
இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இப்போட்டியில் தீபக் ஹூடா மட்டுமே சேர்க்கப்பட்டார். ஆனால் போராடி வாய்ப்பு பெற்ற ராகுல் திரிபாதி, நீண்ட நாட்களுக்கு பின் திரும்பிய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த நிலைமையில் 9 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி மழையால் தாமதமாகி வருகிறது.

Advertisement