- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் 4வது போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானம் எப்படி, புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்து ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

முன்னதாக கடைசி நேரத்தில் ஜஸ்பிரிட் பும்ரா காயத்தால் விலகியதால் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு கூட்டணி ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரது கட்டுக்கோப்பான செயல்பாடுகளால் அசத்தி வருகிறது. ஆனால் பேட்டிங் துறை தான் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா – துணை கேப்டன் ராகுல் ஆகியோர் அடங்கிய ஓப்பனிங் தான் அதிரடியான தொடக்கத்தை கொடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். எனவே இப்போட்டியில் வெல்வதற்கு அவர்களும் எஞ்சிய வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

அழகான அடிலெய்ட்:
அதே சமயம் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா 9வது இடத்தில் தவிக்கும் வங்கதேசத்தை இப்போட்டியில் தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இத்தொடரில் கத்துக்குட்டிகள் அதிர்ச்சி கொடுப்பதால் கவனத்துடன் விளையாட வேண்டிய இந்தியா நவம்பர் 2ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் நகரில் இருக்கும் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியில் களமிறங்குகிறது. உலகிலேயே மிகவும் அழகான மைதானங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த அடிலெய்ட் மைதானம் கடந்த 1873ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1882 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் பழமையான மைதானமாகும்.

1. மொத்தம் 50,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2011 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இதுவரை இங்கு நடைபெற்ற 5 போட்டிகளில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 3 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக 2016க்குப்பின் இங்கு சேச்சிங் செய்த அணிகளே 3 போட்டிகளிலும் வென்றுள்ளன.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் இந்தியா முதலும் கடைசியுமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விராட் கோலியின் (90* ரன்கள்) அதிரடியால் 37 ரன்கள் வித்யாசத்தில் வென்றது. இந்த மைதானத்தில் முதல் முறையாக வங்கதேசம் இம்முறை களமிறங்குகிறது.

3. இந்த மைதானத்தில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 1 போட்டியில் 90* (55) ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக ஜஸ்பிரிட் பும்ரா (3) உள்ளார்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் நகரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இருப்பினும் போட்டி நாளன்று போட்டி நடைபெறும் அடிலெய்ட் ஓவல் மைதான பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக இப்போட்டி நடைபெறும் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி முதல் 11 மணி வரை 5 – 10% மட்டுமே மழைக்கான வாய்ப்புள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம். அதே சமயம் வானம் மேகம் மூட்டத்துடன் குளிர்ச்சியான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
அடிலெய்ட் ஓவல் மைதானம் வரலாற்றில் எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு சமமான வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதைப் புரிந்து கொண்டு ஆரம்பகட்ட சவாலான சூழ்நிலையை சமாளித்தால் பின்னர் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை குவிக்கலாம். அதனாலேயே இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 182 ரன்களாக உள்ளது.

இருப்பினும் பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் அதிகப்படியான திறமையை வெளிப்படுத்தும் ஃபாஸ்ட் பவுலர்கள் நிச்சயமாக விக்கெட்டுகளை எடுப்பார்கள். மேலும் மிடில் ஓவர்களில் சுழல் பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பர்.

இதையும் படிங்க : IND vs BAN : வங்கதேச டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – முழுலிஸ்ட் இதோ

மேலும் இங்கு வரலாற்றில் குறிப்பாக 2016க்குப்பின் நடந்த சர்வதேச டி20 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளதாலும் இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -
Published by