
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. இதைத் தொடர்ந்து நடைபெறும் கடைசிப் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றியைப் பெற்று ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியைத் தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மறுபுறம் சொந்த மண்ணில் இந்தியாவை ஒயிட்வாஸ் செய்து கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3வது போட்டி அக்டோபர் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருக்கும் எஸ்சிஜி மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது.
1848ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிட்னி மைதானம் 44000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1979 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் வரலாற்றில் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த 19 போட்டிகளில் ஆஸ்திரேலியா 16 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியா வெறும் 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் அக்டோபர் 25ஆம் தேதி சிட்னி நகரில் மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. அதே சமயம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களிலேயே சிட்னி ஸ்பின்னர்களுக்கு அதிக சாதகமாக பார்க்கப்படுகிறது. எனவே மிடில் ஓவர்களில் தரமான ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதே போல வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தில் ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலைக் கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை இல்லாமலே கொண்டாட ஐடியா கொடுத்ததே அவர்தான் – திலக் வர்மா பகிர்ந்த தகவல்
எனவே அந்த சவால்களை சமாளித்து சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்களால் நல்ல ரன்கள் குவிக்க முடியும். இந்த மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 224. சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 189. இங்கு வரலாற்றில் 96 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 66 போட்டிகளில் சேசிங் செய்து அணிகளும் பெற்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.