
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார்கள். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். அப்படிப்பட்ட அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஜோடியாக ஓய்வு பெற்றனர்.
அதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய அவர்கள் கடந்த மாதம் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு பிசிசிஐ ஃபேர்வெல் போட்டியை நடத்தாதது இந்திய ரசிகர்களிடம் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள்.
அதன் காரணமாக 2027 உலகக் கோப்பை வரை விராட், ரோஹித் இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்கு முன்பாக இந்தியா விளையாடப் போகும் 27 ஒருநாள் போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஃபேர்வெல் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டோட் கிரீன்பர்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அத்தொடரில் சிட்னியில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டிக்கான விற்பனை நேற்று துவங்கப்பட்டதாக ஆஸ்திரேலிய வாரியத்தின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் நிர்வாக பொது மேலாளர் ஜோயல் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அங்கே விராட், ரோஹித் கடைசியாக விளையாடப் போகிறார்கள் என்பதால் ஒரே நாளில் அனைத்து பொது டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி மோரிசன் பேசியது பின்வருமாறு. “விராட் மற்றும் ரோஹித் போன்ற ஜாம்பவான்கள் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது”
“அதன் காரணமாக புலம் பெயர்ந்த இந்தியர்களிடம் தொடர்ந்து நாங்கள் வலுவான ஈடுபாட்டைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சிட்னியில் நடைபெறும் ஒருநாள் போட்டி பிளாக்பஸ்டர் போட்டியாக அமைவதற்கான அனைத்து பொருட்களையும் கொண்டுள்ளது” என்று கூறினார். அந்தப் போட்டி வரும் அக்டோபர் 25ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அவரை எடுக்காம விட்டது மூளையற்ற முடிவு.. 5 சதமடிச்சாலும் இந்தியா ஜெய்க்க இதை செய்யனும்.. மைக்கேல் கிளார்க்
அத்தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய வாரியம் விராட், ரோஹித் ஆகியோரை கௌரவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சுற்றுப் பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 6, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.