
ஆஸ்திரேலியாவில் முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டி கான்பெரா நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 4 பவுண்டரியுடன் 19 (14) ரன்களில் நாதன் எலிஸ் வேகத்தில் அவுட்டானார். அப்போது வந்த மழையால் தாமதமாகி மீண்டும் துவங்கிய போட்டி 18 ஓவர்களாக வைக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய சுப்மன் கில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37* (20) ரன்கள் விளாசினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் தடுமாறிய அவர் இப்போட்டியில் அதிரடியாக 3 பவுண்டர் 2 சிக்ஸருடன் 39* (24) ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பியதைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது மீண்டும் மழை வந்ததால் இந்தியாவின் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியா 9.4 ஓவரில் 97/1 ரன்கள் அடித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து மழை பெய்ததால் நடுவர்கள் போட்டியை 5 ஓவர்களாக குறைத்து நடத்த காத்திருந்தனர். ஆனால் அப்போதும் மழை ஓய்வு பெறாததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் இரு அணி ரசிகர்களும் ஏமாற்றத்தை சந்தித்தனர். இந்தப் போட்டியில் அடித்த 2 சிக்ஸர்களையும் சேர்த்து சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 86 இன்னிங்சில் 150 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் 150 அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இதையும் படிங்க: 12 வருடம் கழித்து மண்ணைக் கவ்விய பஸ்பால் இங்கிலாந்து.. நியூஸிலாந்து 17 வருடம் கழித்து சாதனை வெற்றி
அத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்கள் அடித்த 5வது வீரர் என்ற பெருமையையும் சூரியகுமார் பெற்றுள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா (இந்தியா): 205
2. முகமத் வாசிம் (அமீரகம்): 187
3. மார்ட்டின் கப்டில் (நியூஸிலாந்து): 173
4. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து): 172
5. சூரியகுமார் யாதவ் (இந்தியா): 150