நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1 – 0 (3) என்ற கணக்கில் மழைக்கு மத்தியில் வென்றது. அடுத்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது போட்டி அக்டோபர் 29ஆம் தேதி ஹமில்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 6:30 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தடுமாற்றமாக பேட்டிங் செய்து 36 ஓவரில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேமி ஸ்மித் 13, பென் டக்கெட் 1, ஜேக்கப் பெத்தல் 18, நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 9, சாம் கரண் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
மண்ணைக் கவ்விய பஸ்பால்:
அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 42* (28), கேப்டன் ஹாரி ப்ரூக் 34 (34), ஜோ ரூட் 25 (34) ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக பிளைர் டிக்னர் 4, நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 176 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு வில் எங் டக் அவுட்டானார். மறுபுறம் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 21 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்த சில ஓவரில் ரவீந்தரா 54 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மிடில் ஆர்டரில் டாம் லாதம் 2, மைக்கேல் பிரேஸ்வெல் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் டேரில் மிட்சேல் பொறுப்புடன் விளையாடி அரை சதத்தை அடித்து 56* (59) ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து சாதனை வெற்றி:
அவருடன் இணைந்து 2 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்ட கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 34* (17) ரன்கள் அடித்து போட்டியை முடித்தார். அதனால் 33.1 ஓவரிலேயே 177/5 ரன்களை எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியது. அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக 2013க்குப்பின் 12 வருடங்கள் கழித்து ஒரு ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: 100 விக்கெட்ஸ் லெப்ட்ஃக்கு மதிப்பில்ல.. நான் வைப்பதே சட்டம்.. அர்ஷ்தீப்பை ஒரே போடாக போட்ட கம்பீர்
அதுமட்டுமின்றி 2008க்குப்பின் 17 வருடங்கள் கழித்து நியூஸிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை ஒரு ஒருநாள் தொடரில் தோற்கடித்து சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது. மறுபுறம் ஜோப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தும் இங்கிலாந்து தோல்வியை தவிர்த்தது. குறிப்பாக பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்து 12 வருடங்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோற்றுள்ளது.



