- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காபாவில் இந்திய அணியின் கம்பேக்கிற்கு குறுக்கே வரும் மழை? பிரிஸ்பேன் வெதர் ரிப்போர்ட் இதோ

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்று இத்தொடரையும் வெல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

அந்த சூழ்நிலையில் அடுத்த போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடைசியாக 2021இல் அங்கு நடைபெற்ற போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வரலாறு படைத்தது. எனவே தற்சமயத்தில் தடுமாறும் இந்திய அணி தங்களுக்கு ராசியான காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்க உள்ளது.

- Advertisement -

காபாவில் மழை:

ஆனால் அந்தப் போராட்டத்திற்கு மத்தியில் மழையும் வருவதற்கு தயாராக உள்ளது. ஆம் பிரிஸ்பேன் காபா மைதானத்தை சுற்றிய பகுதிகளில் போட்டி துவங்கும் டிசம்பர் 14ஆம் தேதி 70% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் அந்தப் போட்டி தாமதமாக துவங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இருப்பினும் 2வது நாளில் சராசரியாக 40% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 3 மற்றும் 4வது நாட்களிலும் சராசரியாக மீண்டும் 40% மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் 5வது நாளில் மீண்டும் 50% அளவுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

இந்தியா கம்பேக் கொடுக்குமா:

அதனால் இந்தப் போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வானிலை அடிக்கடி மாறக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் முதல் நாளில் நிறைய மழை பொழியும் என்று வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் முதல் நாளில் மேகமூட்டம் மட்டுமே இருந்தது. மழை பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க: காபா மைதானத்தில் அந்த இந்திய பந்துவீச்சாளரை வெளுத்து வாங்குவேன் – ஆஸ்திரேலிய வீரர் சவால்

அதே போல இந்தப் போட்டியிலும் இந்தியா கம்பேக் கொடுத்து வெற்றி பெறுவதற்கு மழை வழிவிடும் என்று நம்பலாம். எப்படியிருந்தாலும் இந்தப் போட்டியின் 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும். அதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிறைந்த காபா மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -