2வது டி20 நடைபெறும் க்ரீன்ஃபீல்ட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Greenfield stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பதிவு செய்த போதிலும் இந்திய ரசிகர்கள் இன்னும் திருப்தியடையவில்லை.

இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் நடைபெறும் இத்தொடரின் 2வது போட்டியிலும் வெற்றி காண்பதற்கு இந்தியா தயாராகி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் பவுலிங் சற்று சுமாராக இருந்தது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. எனவே 2வது போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பதற்கு இந்தியா தயாராகியுள்ளது.

- Advertisement -

க்ரீன்பீல்ட் மைதானம்:
மறுபுறம் உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்காக கவலைப்படாத ஆஸ்திரேலியா இப்போட்டியில் வென்று பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நவம்பர் 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரம் நகரில் உள்ள க்ரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2015இல் தோற்றுவிக்கப்பட்டு 55000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் 2017 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ள நிலையில் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இம்மைதானத்தில் அதிக டி20 ரன்கள் (62) அடித்த இந்திய வீரராக கேஎல் ராகுல் முதலிடத்தில் இருக்கும் நிலையில் அதிக விக்கெட்களை (3) எடுத்த பவுலராக அர்ஷிதீப் சிங் திகழ்கிறார். இங்கு இந்திய பதிவு செய்துள்ள அதிகபட்ச டி20 ஸ்கோர் : 170/7, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 26ஆம் தேதி கிரீன்பீல்ட் மைதானத்தை சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாகவும் வானம் இரவு நேரத்தில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று இந்திய வானிலை தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
கிரீன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற 4 சர்வதேச போட்டிகளிலுமே குறைவான ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. குறிப்பாக இங்கு நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 114 ரன்களாக இருக்கிறது. எனவே இம்முறையும் இங்கே பவுலர்கள் குறிப்பாக ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

அதனால் பேட்ஸ்மேன்கள் சற்று நிதானத்துடன் விளையாடினால் மட்டுமே பெரிய ரன்கள் அடிக்க முடியும்.மேலும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இங்கு 2வது இன்னிங்ஸில் பிட்ச் மெதுவாக மாறும் என்பதால் சேசிங் செய்வது கடினமாக இருக்கும். அத்துடன் ஏற்கனவே இங்கு விளையாடப்பட்ட 3 போட்டிகளில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளது. அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement