IND vs AFG : இந்தியாவின் வெற்றிநடை தொடருமா? டெல்லி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Delhi
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்களை சேசிங் செய்த போது 2/3 என சரிந்தும் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது அசத்தலான ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

எனவே அதே புத்துணர்ச்சியுடன் இப்போட்டியிலும் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானை நிச்சயமாக இந்தியா தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் அதற்கு சுப்மன் கில் இல்லாத நிலையில் ரோகித் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அவசியமாகும். மறுபுறம் ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

டெல்லி மைதானம்:
இருப்பினும் ரசித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி போன்ற தரமான வீரர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் முடிந்தளவுக்கு பெரிய சவாலை கொடுத்து இந்தியாவை தோற்கடிக்க போராடும் என்று உறுதியாக நம்பலாம். அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி அக்டோபர் 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

1. பெரோஷா கோட்லா என்ற பெயரில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இம்மைதானம் 1883இல் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 55000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 13 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இங்கே ஆப்கானிஸ்தனை இப்போது தான் முதல் முறையாக எதிர்கொள்கிறது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (300) சாதனை படைத்துள்ளார். அதே போல இங்கு அதிக விக்கெட்களை (9) எடுத்த பவுலராக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் இருக்கிறார். இங்கே இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 289

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று டெல்லி நகரில் மழைக்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் லேசான மேகமூட்டத்துடன் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ஒரு காலத்தில் டெல்லி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் இங்கு பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவதை பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையை இங்கே துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது ஃபிளாட்டான பிட்ச்களுடன் சிறிய பவுண்டரிகளை கொண்டுள்ள டெல்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் டக் அவுட் ஆனதற்கு இதுவே காரணம் – சுனில் கவாஸ்கர்

அதே சமயம் போட்டி நடைபெற நடைபெற ஸ்பின்னர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தம்கூடும். மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்தலாம். அங்கு நடைபெற்ற 27 போட்டிகளில் தலா 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே பேட்டிங்க்கு சாதகமான இம்மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement