இந்தியா – ஆப்கானிஸ்தான் 2வது டி20 நடைபெறும் இந்தூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

Indore Holkar Stadium
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையில் சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது.

இதை தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வருவதால் கூடுதலாக பலமடைந்துள்ள இந்தியா 2வது போட்டியிலும் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றும் என்று நம்பப்படுகிறது. மறுபுறம் முதல் போட்டியில் முடிந்தளவுக்கு போராடிய ஆப்கானிஸ்தான் 2வது போட்டியில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்தூர் மைதானம்:
அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜனவரி 14ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2017 முதல் டி20 போட்டிகளை நடத்தி வரும் இம்மைதானத்தில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது.

இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (134) அடித்த வீரராக கேஎல் ராகுல், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக ரோகித் சர்மா (118, இலங்கைக்கு எதிராக, 2017) சாதனை படைத்துள்ளனர். அதே போல அதிக விக்கெட்டுகள் (5) எடுத்த பவுலராக குல்தீப் யாதவ், சிறந்த பவுலிங்கை (4/51, இலங்கைக்கு எதிராக, 2017) பதிவு செய்தவராக யுஸ்வேந்திர சஹால் முதலிடத்தில் உள்ளனர். இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா : 260/5, இலங்கைக்கு எதிராக, 2017.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
ஜனவரி 14ஆம் தேதி இந்தூர் நகரை சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்தூர் மைதானம் வரலாற்றில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருக்கிறது. குறிப்பாக இங்குள்ள பிட்ச் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஃபிளாட்டாக இருந்து வருகிறது. போதாக்குறைக்கு இங்குள்ள பவுண்டரிகளின் அளவும் சிறியதாக இருக்கிறது. எனவே அதை பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் அடித்து நொறுக்கலாம்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

அதனாலேயே இங்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 210 ரன்களாக இருக்கிறது. அதன் காரணமாக பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே ஓரளவு நன்றாக செயல்பட்டு விக்கெட்களை எடுக்க முடியும். இதற்கு முன் இங்கு நடைபெற்ற 3 போட்டிகளில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. இருப்பினும் இம்முறை பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement