- Advertisement -

ஆஸி அணி சீனியர் கிரிக்கெட்டில் செய்ததை அண்டர் 19-ல் செய்து காட்டிய இந்திய வீரர்கள் – அப்படி என்ன தெரியுமா?

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்துள்ள வரலாற்றின் 14வது ஐசிசி அண்டர் 19 உலககோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் சிறந்த விளையாட போகும் நட்சத்திரங்களை கண்டறியும் இந்த உலக கோப்பை ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது 14 ஆவது உலககோப்பை தொடரானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மேற்கிந்திய தீவுகளில் துவங்கிய இந்த தொடரில் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் “யாஷ் துள்” தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே அசத்த தொடங்கியது. முதலில் நடந்த லீக் சுற்றில் தென்னாபிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய அணிகளை அடுத்தடுத்து சாய்த்து ஹாட்ரிக் வெற்றிகளுடன் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

5வது முறையாக சாம்பியன்:
அதன்பின் துவங்கிய நாக்-அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை மண்ணை கவ்வ செய்த இந்தியா அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்பின் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் சம பலத்துடன் கூடிய இங்கிலாந்துக்கு எதிராக பலப்பரீட்சை நடத்திய இந்தியா முதலில் பேட்டிங் செய்த அந்த அணியை தனது அபார பந்துவீச்சால் வெறும் 189 ரன்களுக்கு சுருட்டியது.

அதை தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்தியா 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து எட்டிப் பிடித்ததால் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்த உலக கோப்பையை வென்ற இந்தியா மீண்டும் 5-வது முறையாக கோப்பையை முத்தமிட்டு அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக உலக சாதனை படைத்தது.

- Advertisement -

ஆட்சி செய்யும் இந்தியா:
சீனியர் கிரிக்கெட்டில் 5 முறை உலக கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரலாற்றில் எந்த அளவுக்கு வெற்றிகரமான அணி என்று ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதே போல அண்டர் 19 உலககோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணி என்றால் அது இந்தியாவாகும். அதாவது சீனியர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆட்சி என்றால் ஜூனியர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆட்சி எனலாம்.

ஏனெனில் இந்த உலககோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக முறை பைனலில் விளையாட அணியாகவும் ஒட்டுமொத்தமாக பைனலில் அதிகமுறை விளையாடிய அணியாகவும் இந்தியா உலகசாதனை படைத்துள்ளது.2016, 2018, 2020, 2022 ஆகிய அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் நடந்த அண்டர் 19 உலக கோப்பை பைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா ஒட்டுமொத்தமாக கடந்த 1998 முதல் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 8 முறை பைனலில் விளையாடியுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஜூனியர் கிரிக்கெட்டில் இந்தியா உலகையே “டாமினேஷன்” செய்யும் அணியாக திகழ்கிறது.

- Advertisement -

ரத்தத்திலேயே கிரிக்கெட்:
இன்னும் சொல்லப்போனால் இந்தியர்களின் ரத்தத்தில் இயற்கையாகவே கிரிகெட் கலந்துள்ளது என்பது இந்த அண்டர் 19 உலககோப்பை 2022 தொடர் நிரூபணம் செய்துள்ளது. ஏனென்றால் கடந்த 2019க்கு பின் கரோனா காரணமாக ரஞ்சி கோப்பை உட்பட சீனியர் கிரிக்கெட் போட்டிகளே இந்தியாவில் நடைபெறாமல் இருந்த நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் முற்றிலும் நடைபெறவில்லை.

அப்படிப்பட்ட நிலையில் நடந்த இந்த உலக கோப்பையில் பங்கேற்ற இதர நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிய போது இந்திய வீரர்கள் மட்டும் முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அபாரமாக செயல்பட்டு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்தார்கள். குறிப்பாக லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டி முடிந்த நிலையில் “கேப்டன் யாஷ் துள் உட்பட 6 முக்கியமான இந்திய வீரர்கள் கரோனா ஏற்பட்டதால் தனிமைப் படுத்தப் பட்டார்கள்”.

அந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் வேறு வழி இல்லாமல் பெஞ்சில் இருந்த வீரர்களை களமிறக்கிய இந்தியா கொஞ்சம் கூட சுணக்கமடையாமல் தொடர்ந்து வெற்றி நடை போட்டது. அதன்பின் நாக் அவுட் சுற்றுக்கு கேப்டன் யாஷ் துள் உட்பட முக்கியமான 6 வீரர்களும் திரும்பியதால் இந்தியாவின் வெற்றி உறுதியானது. இதிலிருந்தே இந்தியாவின் ரத்தத்தில் இயற்கையாகவே கிரிக்கெட் விளையாட்டு ஊறியுள்ளது என கூறுவதில் எந்த தவறும் இல்லை என நம்புகிறேன். மேலும் இந்த வெற்றியால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் வலுவாகவும் வளமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -
Published by