வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பாக தமிழக வீரர் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது.
ரோஹித் சர்மா 30 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக 70 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இன்று இந்திய அணி தங்களது இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடாமலே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்திய அணி முதல் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த ரன்களில் பாதிக்கு மேல் கடந்து விட்டதால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் பெரிய அளவில் ரன்களை குவிக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.
மேலும் இன்னும் சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, இஷான் கிஷன், ஜடேஜா வரை அனைவராலும் பேட்டிங் செய்ய முடியும் என்பதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேரம் முழுவதும் இந்திய அணி விளையாடும் பட்சத்தில் நிச்சயம் 200 முதல் 250 ரன்கள் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியை விட முன்னிலை பெற அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : நல்லவேளை உங்கள அவசரப்பட்டு இந்தியாவுக்கு செலக்ட் பண்ணல, சர்பராஸ் கான் மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன?
அதேபோன்று நாளைய மூன்றாவது நாள் ஆட்டத்திலும் நூறு ரன்கள் வரை குவித்தாலே இந்திய அணி கிட்டத்தட்ட 300 ரன்களுக்கு மேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்கினை நிர்ணயிக்க முடியும். அப்படி பெரிய இலக்கினை நிர்ணயித்தால் நிச்சயம் மீண்டும் இந்திய அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி சரணடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.