ஐபிஎல் தொடருக்கு பின் இந்தியாவின் மற்றுமொரு புதிய கிரிக்கெட் தொடர் அறிவிப்பு ! எங்கே, எப்போது – முழு விவரம்

ind
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்டத்தை எட்டி மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் அத்தனை முக்கிய நட்சத்திர வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இப்போதே தயாராகும் வகையில் ஒரு நல்ல வாய்ப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு விளையாட பெரும்பாலான இந்திய வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்:
அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஐபிஎல் முடிந்ததும் வரும் ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 9 – 19 வரை நடைபெறும் இந்தத் தொடருக்கு பின்பு அயர்லாந்துக்கு பறக்கும் இந்தியா அங்கு வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அப்படியே பக்கத்தில் இருக்கும் இங்கிலாந்துக்குச் சென்று கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் விளையாடுகிறது.

- Advertisement -

4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என இந்தியா முன்னிலை வகிக்கும் அந்த தொடர் நிறைவு பெற்றதும் ஜூலை 7 – 17 வரை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்கிறது. அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படும் இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் முடிவடையும் அந்த சுற்றுப் பயணத்திற்கு பின் இந்தியா தாயகம் திரும்புகிறது.

ஆஸ்திரேலிய தொடர்:
அதன்பின் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடர் இம்முறை டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்காக 20 ஓவர் தொடராக நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு நேரடியாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தற்போது அதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் டி20 தொடரில் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது 2022/23 ஆண்டிற்கான தங்களது கிரிக்கெட் கால அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வரலாற்றிலேயே முதல் முறையாக வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அந்த சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக விளையாட உள்ளது. எனவே அதற்கு முன்பாக இந்தியா போன்ற ஒரு வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு உலக கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே இந்த தொடருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

- Advertisement -

பார்டர் – கவாஸ்கர்:
அத்துடன் வரும் 2023 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மீண்டும் இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்க உள்ளது. கடைசியாக கடந்த 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் 36க்கு ஆல் அவுட்டான பின் அஜிங்கிய ரஹானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 என கோப்பையை வென்று சாதனை படைத்ததை இந்திய ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

எனவே அந்த தோல்விக்கு இம்முறை இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடித்து பழிதீர்க்க ஆஸ்திரேலியா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாகவும் நடைபெறுகிறது. அதில் இந்தியா தற்போது 6 வெற்றி 3 தோல்வி 2 ட்ரா என 58.83 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கணுனா இந்திய அணியில் அவரை சேர்த்தே ஆகனும் – ஷேன் பொல்லாக் ஓபன்டாக்

மறுபுறம் ஆஸ்திரேலியா 75.00 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு அந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா கட்டாயம் 4 போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த தொடருக்காக இந்திய ரசிகர்கள் தற்போது முதலே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement