கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 13-வது ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன் அடிப்படையில் தற்போது மொத்தம் 45 லீக் போட்டிகள் கொண்ட முதற்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்றும், அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள் எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
இவ்வேளையில் தற்போது வரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தற்போது புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்திருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும் இதுவரை இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இப்படி இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 12 புள்ளிகளை பெற்றிருந்தும் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படாதது ஏன்? என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இந்திய அணியை சமன் செய்ய புள்ளிபட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு கூட முடியும்.
எனவே தற்போது வரை உறுதி செய்யப்படாமல் இருக்கும் இந்த புள்ளி பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட 14 புள்ளிகளுடன் அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும். எனவே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாக இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.
இதையும் படிங்க : என்னை பொறுத்த வரை.. அதுல சச்சினை ஆல்ரெடி விராட் கோலி மிஞ்சிட்டாரு.. கிரேம் ஸ்மித் வெளிப்படை
மற்றபடி தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை பூர்த்தி செய்ய இருக்கும் வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கும் அரையிறுதிக்கு தகுதிபெற ஒரு மறைமுக வாய்ப்பிருக்கிறது. அதோடு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை எளிதில் மற்ற அணிகள் பிடித்தாலும் நான்காவது இடத்தை பிடிக்க நிச்சயம் கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.