
சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதனை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
அப்படி அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்த வாஷிங்டன் சுந்தர் விலா எலும்பு பகுதியில் காயமடைந்தார்.
அதனால் ஒருநாள் தொடரில் இருந்து விலகிய அவருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி20 தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளதால் டி20 தொடருக்கான இந்திய அணியிலும் மாற்று வீரர் அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்திற்காக 3 பேர் போட்டிக்கு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடர் மட்டுமின்றி எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமைடைய தாமதம் ஆகும் என்பதால் அவரால் டி20 உலககோப்பை தொடருக்கு முன்னர் முற்றிலுமாக தயாராக முடியாது என கூறப்படுகிறது.
அதன் காரணமாக இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு சரியான மாற்று வீரரை டி20 உலககோப்பை தொடருக்காக தேர்வு செய்தாக வேண்டும். அந்தவகையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரியான் பராக் சரியான தேர்வாக இருப்பார். ஏனெனில் ஏற்கனவே டி20 அணியில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்? வாய்ப்பு கிடைக்குமா? – விவரம் இதோ
இவ்வேளையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரியான் பராக் இடம்பெற்றால் அவர் பேட்ஸ்மேனாகவும் நல்ல ஒரு தேர்வாக இருப்பார். அதேபோன்று பகுதிநேர பந்துவீச்சாளராகவும் அவரால் செயல்பட முடியும் என்பதால் ரியான் பராக் மாற்றுவீரராக சரியான தேர்வாக இருப்பார். இந்த விடயத்தில் நிர்வாகம் என்ன முடிவினை எடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.