
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 5 சதங்களை விளாசி இருந்தாலும் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை சந்தித்திருந்தது.
இதன் காரணமாக நாளை ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்க இருக்கும் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் நாளைய இரண்டாவது போட்டியில் மூன்று மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் முதல் மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் அணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அதனை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இரண்டாவது போட்டியில் விளையாட தயாராக இருந்தாலும் பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்பதனால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார் என்று தெரிகிறது. அவர் அணிக்குள் வரும் பட்சத்தில் பேட்டிங் பலமும் அதிகரிக்கும் என்பதனால் அவரது சேர்க்கையும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதேபோன்று மூன்றாவது மாற்றமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூர் முதல் போட்டியில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தாத வேளையில் அவருக்கு பதிலாக நிதீஷ்குமார் ரெட்டி அணிக்குள் வருவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : சாய் சுதர்சன் கூட விளையாடும்போது எனக்கு அந்த கவலையே இருக்காது – புகழ்ந்து தள்ளிய ஜாஸ் பட்லர்
ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அறிமுகமான அவர் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்து அசத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இப்படி நாளைய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று மாற்றங்கள் பிளேயிங் லெவனில் நிகழும் என்று கூறப்படுகிறது.