இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரரான சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டியில் விளையாடிய அவர் 890 ரன்களை விளாசி அசத்தினார்.
இதன் காரணமாக கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு அடுத்து சுப்மன் கில் தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக இருப்பார் என்று ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வந்தனர். அதுமட்டும் இன்றி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதம் என வெளுத்து வாங்கிய அவர் ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
கடைசியாக அவர் விளையாடிய ஐந்து சர்வதேச போட்டிகளில் ஒரு முறை மட்டுமே முப்பது ரன்களை கடந்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது இந்த கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யும் சுப்மன் கில் ஆசியாவிற்கு வெளியே பெரிய அளவில் இதுவரை விளையாடவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடந்த காபா டெஸ்ட் போட்டியில் மட்டும் 90 ரன்களுக்கு மேல் அடித்த அவர் வெளிநாட்டு மண்ணில் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலி உடன் அவரை ஒப்பிடுவது தவறு என்றும் விராட் கோலி கிட்டத்தட்ட 15-16 ஆண்டுகள் நிலையான ஆட்டத்தை உலகெங்கிலும் வெளிப்படுத்தி உள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் கில் தற்போது தான் தனது கரியரின் ஆரம்பத்தில் தான் உள்ளார். எனவே அவரை இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிடக்கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இத்தனை ஆண்டு காலமாக கோலி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜாம்பவான் அந்தஸ்த்தில் உள்ளார். அதேபோன்று சுப்மன் கில்லும் தொடர்ச்சியான நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : வீடியோ : குட்டி ரசிகையின் அன்பு பரிசை உடனே வாங்கிக்கொண்ட விராட் கோலி கண் கலங்க தந்தை – ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் மட்டும் அடித்து விட்டு அதன்பிறகு அந்த ரன்களை வைத்து காலத்தை ஓட்டக்கூடாது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் அரைசதம் அடித்து இஷான் கிஷன் தன்னை நிரூபித்துள்ள வேளையில் சுப்மன் கில் மட்டும் தடுமாறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.