
இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்ட வேளையில் கே.எல் ராகுலின் பேட்டிங் ஆர்டர் மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஏனெனில் ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராகவும் சரி, நான்காவது வீரராகவும் சரி, ஐந்தாவது இடத்திலும் சரி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே எல் ராகுல் சூழலுக்கு ஏற்ப தேவையான பேட்டிங் ஆர்டரில் விளையாடி வந்தார்.
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது கூட ஐந்தாவது இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி இறுதி போட்டி வரை செல்ல உதவி புரிந்திருந்தார். தனது பேட்டிங் ஆர்டர் எதுவாக இருந்தாலும் சிறப்பாக விளையாடும் அவருக்கு தொடர்ந்து ஐந்தாவது இடத்திலேயே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் ராகுலுக்கு முன்னதாக அக்சர் பட்டேலை களம் இறக்கி ராகுலை ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் கம்பீர் பயன்படுத்தி வந்தார். இது குறித்து விளக்கம் அளித்த கேப்டன் ரோகித் கூறுகையில் : பேட்டிங் ஆர்டரில் வலது கை இடது கை காம்பினேஷன் வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் ராகுல் இப்படி பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமே கவுதம் கம்பீர் தான் என்று ராசிகாரர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த கம்பீருக்கும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கும் மைதானத்தில் வாக்குவாதம் முற்றியது.
அப்போது விராட் கோலியை சமாதானம் செய்து அனுப்பி வைத்த கே.எல் ராகுல் கம்பீரை ஆதரிக்காமல் இருந்தார். அதேபோன்று கம்பீர் லக்னோ அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்கு செல்ல கே.எல் ராகுலின் பரிந்துரை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தோனி எப்போவும் தல தான்.. அப்போ போன மாசம் சொன்னது பொய்யா? ஹர்பஜனை விளாசும் ரசிகர்கள்.. காரணம் என்ன?
இதன் காரணமாக கே.எல் ராகுல் மீது அதிருப்தியில் இருக்கும் கம்பீர் அதனை மனதில் வைத்து தான் தற்போது ஒருநாள் அணியில் கே.எல் ராகுலின் பேட்டிங் ஆர்டரை பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும் ஒருவேளை அந்த இடத்தில் களமிறங்கி ராகுல் பார்ம் அவுட் ஆகும் பட்சத்தில் அவரை அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக தூக்க கம்பீர் திட்டம் தீட்டியிருப்பதாலே இதுபோன்ற விடயங்களை செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.