
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அத்தொடரில் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் போலவே ரோகித் உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் சூரியகுமார் தலைமையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் – திலக் வர்மா ஆகியோர் 2 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை தெறிக்க விட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்தார்கள். இந்த சூழ்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்துள்ளார்.
அதன் மூலம் உலகின் புதிய நம்பர் ஒன் டி20 ஆல் ரவுண்டராக முன்னேறிய அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதை விட டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் திலக் வர்மா 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். சொல்லப்போனால் நவம்பர் 19ஆம் தேதி வரை அவர் 72வது இடத்தில் இருந்து வந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடுத்தடுத்த 2 சதங்கள் அடித்தார்.
அதன் காரணமாக தற்போது ராக்கெட் வேகத்தில் 69 இடங்கள் முன்னேறியுள்ள திலக் வர்மா உலகின் டாப் 3வது டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி விஸ்வரூப வளர்ச்சியை கண்டுள்ளார். இருப்பினும் அந்த தொடரில் அசத்த தவறிய கேப்டன் சூரியகுமார் நான்காவது இடத்திற்கும் விளையாடாத ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்திற்கும் சரிந்துள்ளார்கள். அதே சமயம் சஞ்சு சாம்சன் 22வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் சமீப காலங்களாகவே தடுமாறி வந்த சஞ்சு சாம்சன் ஒரு வழியாக தற்போது சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். அதே போல திலக் வர்மா இந்திய அணிக்கு மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக கிடைத்துள்ளார். டாப் 10 பவுலர்களுக்கான பட்டியலில் தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய அர்ஷ்தீப் சிங் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: ரிஷப் பண்டிற்கு பதிலாக அந்த விக்கெட் கீப்பரை 15-20 கோடி கொடுத்து டெல்லி வாங்கும் – சுனில் கவாஸ்கர் கணிப்பு
ரவி பிஸ்னோய் 8வது இடத்தில் நீடிக்கிறார். அக்சர் படேல் 13வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அணிகள் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவில் வெற்றியைப் பெற்ற இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. இதை அடுத்து ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.