வெற்றிக்கு கடைசி 12 பந்தில் களத்தில் தினேஷ் கார்த்திக், பாண்டியா, பண்ட் இருந்தால் இந்தியா தோற்றுவிடும், முன்னாள் பாக் வீரர் கருத்து

Dinesh-Karthik-and-Hardik-Pandya
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் குறிப்பாக வெள்ளை பந்து போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் உழைப்பை வீணடிக்காத வகையில் கடைசி கட்ட ஓவர்களில் குறைவான பந்துகளில் தேவைப்படும் அதிகப்படியான ரன்களை கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றிகரமாக குவிப்பது லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் கடமையாகும். அதனால் பினிஷர்கள் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் விளையாடுவதற்கு அனைவராலும் முடியாது. ஏனெனில் கடைசி நேரங்களில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தையும் அந்த சமயத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடிய ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகரமாக போட்டிகளை முடிப்பது சவாலான காரியமாகும்.

Dinesh Karthik and Hardik Pandya

- Advertisement -

அந்த வகையில் வரலாற்றில் மைக்கேல் பெவன், எம்எஸ் தோனி ஆகியோர் சிறந்த பினிஷர்களாக போற்றப் படுகின்றனர். தற்போதைய இந்திய அணியில் ஹர்டிக் பாண்டியா, 37 வயதானாலும் இளம் வீரரை போல் கடைசி ஓவர்களில் களமிறங்கிய அதிரடியாக ரன்களை குவிக்கும் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பினிஷர்களாக பார்க்கப்படுகின்றனர். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டின் வருகையால் ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா என மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஏறக்குறைய அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதில் அதிரடியாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் திறமை பெற்றவர்களாக ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள்.

பண்ட் – பாண்டியா:
இதில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு ஏற்கனவே ஒருசில வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல் ரிஷப் பண்ட்டும் ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் கடைசிவரை அபாரமாக செயல்பட்டு வெற்றிகரமாக பினிஷிங் செய்து காட்டியுள்ளார். இந்த இருவரும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 260 ரன்களை துரத்திய இந்தியா 72/4 என தடுமாறிய போது 133 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்கள்.

Rishabh Pant Hardik Pandya

அதேபோல் ஐபிஎல் 2022 தொடரில் 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி பெங்களூருவுக்கு 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக்கொடுத்த தினேஷ் கார்த்திக் அதற்காக தனியாக சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற விருதையும் வென்று இந்தியாவுக்கு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடந்த டி20 போட்டியிலும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியிலும் அசத்திய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.

- Advertisement -

அடிக்க முடியாது:
மொத்தத்தில் மேற்குறிப்பிட்ட அத்தனை வீரர்களுமே கடைசி கட்ட ஓவர்களில் தேவைப்படும் ரன்களை அதிரடியாக செயல்பட்டு குவிக்கும் திறமையை பெற்றுள்ளதை வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல் பல முறை களத்திலும் பார்த்துள்ளோம். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வேண்டுமானால் கடைசி ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு பினிஷிங் செய்ய முடியும் ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி 12 பந்துகளில் இந்தியாவுக்கு வெற்றி தேவைப்படும் போது களத்தில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் இருந்தால் அவர்களால் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.

latif

குறிப்பாக டாப் ஆர்டர் சொதப்பும் போது இந்த வீரர்கள் கடைசி நேரத்தில் களத்தில் இருந்தால் இந்தியா தோல்வியடையும் என்று தெரிவித்துள்ள அவர் இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் போன்ற பிரீமியர் தொடர்களில் அவரால் முடியும். ஆனால் இந்தியாவுக்காக என்று வரும்போது அவர்களிடம் 3 – 4 நல்ல தரமான பேட்ஸ்மென்கள் இருப்பார்கள். எனவே 20 ஓவர்களில் அவர் (கார்த்திக்) எப்படி, எங்கு பேட் செய்வார். ஆனால் ஆம் அவருக்கு பின் லோயர் ஆர்டரில் கடைசி 12 பந்துகளில் இந்தியாவுக்கு வெற்றி தேவைப்படும் போது ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் இருந்தால் இந்தியா தோல்வியடையும்”

“எனவே ஐபிஎல் போன்ற தொடர்களில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற தரமான அணிகளுடன் விளையாடும் போது குறிப்பாக டாப் ஆர்டர் சொதப்பிய பின் அவர்களால் சிறப்பாகச் செயல்படுவது கடினமாகும்” என்று கூறினார். சமீப காலங்களில் இந்த வீரர்கள் சிறப்பாக அதே சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இவரின் இந்த கருத்து இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Advertisement