ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை நன்றாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியது.
ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்காவை நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அபாரமாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
தென் ஆப்பிரிக்கா போராட்டம்:
அதிகபட்சமாக கேப்டன் பவுமா 38, டேவிட் பேடிங்கம் 45 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை அபாரமாக பௌலிங் செய்த தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து தெறிக்க விட்டது.
குறிப்பாக உஸ்மான் கவாஜா 6, கேமரூன் க்ரீன் 0, லபுஸ்ஷேன் 22, ஸ்டீவ் ஸ்மித் 13, டிராவிஸ் ஹெட் 9, வெப்ஸ்டர் 9, கேப்டன் கமின்ஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் தென் ஆப்பிரிக்கா சொற்ப ரன்களில் காலி செய்தது. அதனால் 73/7 என சரிந்த ஆஸ்திரேலியாவை 200 ரன்கள் முன்னிலைக்குள் சுருட்டும் வாய்ப்பு தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்தது. ஆனால் அப்போது அலெக்ஸ் கேரி மற்றும் மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர்.
ஆஸ்திரேலியா முன்னிலை:
அவர்களுக்கு எதிராக ரபாடா, லுங்கி நிகிடி போன்ற தென்னாப்பிரிக்கா பவுலர்கள் சில நோபால் பந்துகளை வீசினார்கள். அதே போல அவர்கள் கொடுத்த சில கடினமான கேட்ச்சுகளை தென்னாப்பிரிக்கா ஃபீல்டர்கள் கோட்டை விட்டனர். அதைப் பயன்படுத்திய அந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்தார்கள்.
இதையும் படிங்க: கில், கருண் நாயர் வேணாம்.. சாய் சுதர்சனுக்கு இந்த வாய்ப்பை கொடுங்க.. சஞ்சய் பங்கர் பேட்டி
அதில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானாலும் ஸ்டார்க் 16* ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவளுடைய ஆட்டத்தால் 2வது நாள் முடிவில் 144/8 ரன்களை எடுத்துள்ள ஆஸ்திரேலியா 218 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. ஏனெனில் கடைசி இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 200+ ரன்களை சேசிங் செய்வது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது.



