இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் இருபதாம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு பதிலாக விளையாடப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் புதிய பேட்டிங் வரிசை பற்றி முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். அதில் முக்கியமான 3வது இடத்தில் சுப்மன் கில் அல்லது 7 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயர் விட தமிழகத்தின் சாய் சுதர்சன் பொருத்தமாக விளையாடுவார் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கியமான 3வது இடம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனது புத்தகத்தில் சுப்மன் கில், கருண் நாயர் ஆகிய யாரும் 3வது இடத்தில் விளையாடுபவர்களாக இல்லை. கருண் நாயர் விளையாடுவார் என்றால் அவர் கொஞ்சம் லோயர் மிடில் ஆடரில் பேட்டிங் செய்ய வேண்டும். இவை அனைத்தும் சுப்மன் கில் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்பதை காட்டுகிறது”
“அப்போது தான் மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் விளையாட முடியும். அதில் அபிமன்யு ஈஸ்வரன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் நல்ல ரன்கள் குவித்தார். அவர்கள் இருவரில் ஒருவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார்கள். 4வது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவதற்கு பொருத்தமாக இருப்பார்”
பங்கர் கருத்து:
“5வது இடத்தில் ரிஷப் பண்ட், 6வது இடத்தில் கருண் நாயர் ஆகியோர் விளையாடுபவர்கள். இது தான் தற்போதைய நிலையை பொறுத்த வரை இந்திய பேட்டிங் துறையின் கலவையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய புரிதலாகும்” என்று கூறினார். முன்னதாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கவுன்டி தொடரில் விளையாடி ஒரு சதத்தை அடித்து அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பும்ராவை 5 போட்டியிலும் யூஸ் பண்ணனுமா? அப்போ இதை பண்ணுங்க.. கில்லுக்கு ஐடியா குடுத்த – சவுரவ் கங்குலி
மேலும் 2025 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கிறார். எனவே அபிமன்யு ஈஸ்வரனை காட்டிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க பிரகாசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் சுதர்சன் மூன்றாவது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும் என்று சஞ்சய் பங்கர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.