இந்தியாவை தட்டி கேட்க யாருமே இல்லையா? ஐசிசி நடவடிக்கை எடுக்கணும் – 2 முன்னாள் ஆஸி வீரர்கள் கொந்தளிப்பு

Rahul Dravid Pitch
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இத்தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்யும் லட்சியத்துடன் விளையாடுகிறது. அதற்கு சவாலாக ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் லட்சியத்துடன் களமிறங்குகிறது.

அதனால் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டியில் ஒரு வகையான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முதன்மை போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதமே விமர்சித்தார். அதை ஏற்றுக்கொண்ட முன்னாள் வீரர் இயன் ஹீலி இம்முறையும் அதே போன்ற மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 2 – 1 (4) என்ற கணக்கில் நியாயமின்றி இந்தியா வெல்லும் என்று விமர்சித்தார்.

- Advertisement -

ஐசிசி நடவடிக்கை எடுக்கணும்:
மேலும் அதன் காரணமாக இந்தியாவை நம்பாமல் சிட்னியில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச்சை உருவாக்கி அதில் பயிற்சி எடுத்து விட்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தை பார்த்து ஏமாற்றத்தை தெரிவித்தனர். குறிப்பாக தங்களது பேட்டிங் வரிசையில் 6 வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால் அவர்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே பிட்ச்சின் 2 புறங்களிலும் வலப்பக்கத்தில் காய்ந்த தன்மையும் எஞ்சிய பகுதிகளில் நன்றாக தண்ணீர் அடித்து ஈரப்பதமான தன்மையும் இருப்பது போன்ற பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் பரபரப்பாக விமர்சித்தார்.

அத்துடன் தங்களை சாய்ப்பதற்காக வேண்டுமென்றே பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்களும் வசை பாடின. அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் ஜேசன் கில்ஸப்பி பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் வகையில் இந்திய மைதான பராமரிப்பாளர்கள் செயல்பட்டுள்ளார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவை சாய்ப்பதற்கு சுழல் பந்து வீச்சு பெரிய வேலை செய்யும் என்பதை மனதில் கொண்டு இந்தியாவின் பலத்திற்கேற்ப சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைத்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதான பராமரிப்பாளர்கள் விதிமுறைகளுக்கு அடிப்படையில் சிறந்த பிட்ச்சை உருவாக்குகிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அவரை விட ஒரு படி மேலே சென்று மற்றொரு முன்னாள் வீரர் சைமன் ஓ’டோனல் இந்த விஷயத்தில் ஐசிசி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக விமர்சித்துள்ளது பின்வருமாறு. “இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு இது சரியில்லை என்று தோன்றினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிட்ச் சரியில்லை என்று இப்போட்டியில் இருக்கும் ஐசிசி நடுவர் நினைத்தால் அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் எப்போதுமே இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவதும் அதைப் பற்றி நாம் பேசுவதும் வழக்கமாகி விட்டது”

“ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டின் இயல்பான தரநிலைகள் இந்த மைதானத்தில் உண்மையாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் ஐசிசி ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூறினார். ஆனால் இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சும் அதற்கு சாதகமான ஆடுகளங்களும் இருக்கவே கூடாதா? என்று பதிலடி கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஓய்வு பெற்று 10 வருடமாகியும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் நாயகனாக சச்சின் படைத்துள்ள 10 சாதனைகளின் பட்டியல்

அத்துடன் ஆஸ்திரேலியாவில் முதல் நாளிலிருந்து வேகம் மற்றும் பவுன்ஸ் இருப்பது இயற்கை என்று சொல்லும் நீங்கள் இந்தியாவில் முதல் நாளிலேயே பந்து சுழன்றால் அது செயற்கை என சொல்வது வேடிக்கையாக இருப்பதாக தெரிவிக்கும் இந்தியா ரசிகர்கள் கடந்த மாதம் வேண்டுமென்றே காபாவில் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச்சை உருவாக்கி தென்னாப்பிரிக்காவை 2 நாட்களில் வென்றது மட்டும் நியாயமா என்றும் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement