2024 டி20 உலகக் கோப்பையில் வரும் ஸ்ட்ரிக்ட்டான ரூல்.. ஸ்டாப் க்ளாக் விதிமுறையை அறிவித்த ஐசிசி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அடிப்படை விதிமுறைகளில் ஐசிசி அவ்வப்போது மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு போட்டி முடிவதில்லை என்பது தற்போது கிரிக்கெட்டில் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதை தடுப்பதற்காக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறும் அணிகளுக்கு போட்டி கட்டணத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக ஐசிசி விதித்து வருகிறது.

அது போக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் போனால் அதற்கு தண்டனையாக உள்வட்டத்திற்குள் வெளியே நிற்கும் ஃபீல்டர்களில் ஒருவரை குறைக்கும் விதிமுறையையும் ஐசிசி ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி பல்வேறு போட்டிகள் இப்போதும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடைபெற்று முடிவதில்லை. அதை தடுப்பதற்காக தற்போது ஐசிசி ஸ்டாப் க்ளாக் எனும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

- Advertisement -

புதிய விதிமுறை:
அதன் படி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிந்ததும் அடுத்த 60 நொடிக்குள் மற்றொரு ஓவரை ஃபீல்டிங் செய்யும் அணி வீச வேண்டும். அதை கண்காணிப்பதற்கு கையில் நிறுத்த கடிகாரத்தை (ஸ்டாப் க்ளாக்) நடுவர்கள் வைத்திருப்பார்கள். குறிப்பாக முந்தைய ஓவர் முடிந்ததும் அதை 0 என்று நடுவர்கள் மாற்றிக் கொள்வார்கள்.

எனவே 60வது நொடி முடிவதற்குள் அடுத்த ஓவரை ஃபீல்டிங் செய்யும் அணி வீசுவதற்கு துவங்க வேண்டும். ஒருவேளை அதை செய்யத் தவறினால் முதல் 2 முறை மட்டும் நடுவர்கள் எச்சரிக்கை கொடுப்பார்கள். 3வது முறையாக அதை செய்யத் தவறினால் அதற்கு தண்டனையாக 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்படும். இந்த புதிய விதிமுறை வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து நடைமுறைக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

அதே சமயம் ஓவர்களுக்கு நடுவே விக்கெட் விழுந்து புதிய பேட்ஸ்மேன் வரும் போதும், அதிகாரப்பூர்வ தண்ணீர் இடைவெளி விடும் போதும், ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் போது நடுவர் அனுமதிக்கும் போதும், தவிர்க்க முடியாத காரணத்தால் நிலைமை கைமீறும் போதும் இந்த விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கனவு காணாதீங்க.. இந்தியர்கள் யாரும் அவ்வளவு ஏக்கத்தோட இல்ல.. பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த ஹர்பஜன்

மேலும் மழையால் 2024 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் பாதிக்கப்படுவதை தடுக்க ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் குரூப் சுற்று போட்டிகளின் வெற்றிகளை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்த பட்சம் 5 ஓவர்களும், நாக் அவுட் சுற்று போட்டிகளின் வெற்றிகளை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்களும் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

Advertisement